என் மலர்
உள்ளூர் செய்திகள்
பரமன்குறிச்சி முத்தாரம்மன் கோவில் விழாவில் பால்குட ஊர்வலம்
- வாகனம் காத்த விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
- நாளை பரமன்குறிச்சி முந்திரித்தோட்டம் மண்ணின் மைந்தர்களின் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.
உடன்குடி:
உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பரமன்குறிச்சி முந்திரித்தோட்டம் முத்தாரம்மன் கோவில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஆவணி திருவிழாவையொட்டி நேற்று காலை 7 மணிக்கு குலசை முத்தாரம்மன் கோவிலில் இருந்து புனித நீர் எடுத்து பரமன்குறிச்சி பஜாரில் உள்ள வாகனம் காத்த விநாயகர் கோவிலில் வழிபாடு செய்து பின்பு அங்கு இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக மேளதாளத்துடன் சென்றனர். அம்பாளுக்கு சிறப்பு பால் அபிஷேகம் செய்தனர். மதியம் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனையுடன் அம்பாள் மஞ்சள் நீராடுதல் நையாண்டி மேளத்துடன் அம்பாள் வீதியுலா வந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 8 மணிக்கு படை கஞ்சி வார்த்தல், நள்ளிரவு 12 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை மற்றும் பெண்கள் முளைப்பாரி எடுத்து அம்பாள் வீதியுலா நடந்தது. இன்று (புதன்கிழமை) காலையில் கொடை விழா நிறைவு சிறப்பு பூஜை நடைபெறும்.
விழாவையொட்டி வில்லிசை, கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை (31-ந்தேதி) பரமன்குறிச்சி முந்திரித்தோட்டம் மண்ணின் மைந்தர்களின் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.