search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டம்
    X

    குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டம்

    • 2 கட்டிடம் கட்டுவதற்கு தற்போது உள்ள பள்ளி வளாகத்தில் இடவசதி இல்லை.
    • குழந்தைகள் பள்ளிக்கு செல்லாததால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அருகே உள்ள வயலப்பாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அங்கன்வாடி முதல் எட்டாம் வகுப்புகள் வரை சுமார் 220- மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு போதுமான வகுப்பறை கட்டிட வசதி, விளையாட்டு மைதானம் இல்லை. மேலும் 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் சிதிலமடைந்து விட்டதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த கட்டிடத்தை இடித்து, அந்த இடத்தில் தற்போது ஒரு வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இப்பள்ளிக்கு 3 -வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் மற்றும் லேப் கட்டிடம் கட்ட அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த 2 கட்டிடம் கட்டுவதற்கு தற்போது உள்ள பள்ளி வளாகத்தில் இடவசதி இல்லை.

    ஆனால் ஊருக்கு நடுவில் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் புதிய கட்டிடங்களைக் கட்டினால் மாணவர்களுக்கு போதிய இடவசதி கிடைப்பதோடு மட்டும் அல்லாமல விளையா ட்டு மைதானமும் அமைக்கலாம். பள்ளி, தற்போது ஊருக்கு மேற்கு பகுதியில் உள்ளதால் கிழக்கு பகுதியிலிருந்து வரும் மாணவர்கள் கனரக வாகனங்கள் செல்லும் பாதையில் ஆபத்தான சூழ்நிலையில் பள்ளியில் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில், புதிய இடத்தில் கட்டிடம் கட்டித்தர வேண்டுமென ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்றத் தலைவர், துணைத்தலைவர், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் ஆகியோர்களுக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    ஆனால் மக்களின் கோரிக்கையை ஏற்காமல் மீண்டும் பள்ளி வளாகத்தில் உள் பகுதியில் கட்டிடம் கட்ட வேலைகள் ஆரம்பித்ததால் ஆத்திரமடைந்து வயலப்பாடியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர் கண்ணதாசன், ஆகியோர் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று மாணவர்களை அழைத்தபோது பெற்றோர்கள் அனுப்ப மறுத்துள்ளனர். பள்ளி திறந்து 2 மணி நேரம் ஆகியும் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாததால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.

    பின்னர் தகவல் அறிந்து வந்த வட்டாச்சியர் கோவிந்தம்மாள், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்கொடி, ஆகியோர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையில் இன்னும் சில நாட்களில் வேறு இடத்தை தேர்வு செய்து அங்கு புதிய கட்டிடம் கட்டி இந்த பள்ளியை மாற்றி தருவதாக உத்திரவாதம் அளித்ததை தொடர்ந்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×