search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில்களில் தண்ணீர் இல்லாமல் பயணிகள் திண்டாட்டம்
    X

    ரெயில்களில் தண்ணீர் இல்லாமல் பயணிகள் திண்டாட்டம்

    • வெயிலின் தாக்கம் ரெயில்வே துறையிலும் எதிரொலிக்கிறது.
    • ரெயில்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    வெயிலின் தாக்கம் ரெயில்வே துறையிலும் எதிரொலிக்கிறது. கோடை விடுமுறை காரணமாகவும, வெயில் காரணமாகவும் சென்னையில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கும், கோடை வாசஸ்தலங்களுக்கும் படையெடுக்கிறார்கள்.

    இதனால் அனைத்து ரெயில்களும் நிரம்பி வழிகின்றன. எந்த ரெயிலிலும் டிக்கெட் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடுகிறார்கள்.

    அதே நேரம் தண்ணீர் கிடைக்காமல் ரெயில்கள் திண்டாடுகின்றன. சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து தொலை தூரங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் நிரப்புவதற்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    நிலத்தடி நீர் குறைந்து விட்டதாலும் தனியார் தண்ணீர் லாரிகளும் தேவையான அளவு சப்ளை செய்ய முடியாததாலும் தண்ணீர் தேவையை சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள்.

    வார நாட்களில் 50 சதவீதமும், வார இறுதி நாட்களில் 75 சதவீதமும் தண்ணீர் நிரப்பினார்கள். இப்போது வார நாட்களில் சுமார் 25 சதவீதம்தான் தண்ணீர் நிரப்பப்படுகிறது.

    இதனால் ரெயில் புறப்பட்ட 2 முதல் 3 மணி நேரத்தில் தண்ணீர் தீர்ந்து விடுகிறது. அதன் பிறகு தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள்.

    குறிப்பாக கழிவறைகளில் தண்ணீர் பயன்படுத்த முடியாததால் நாற்றம் அடிக்கிறது. இதனால் தொலைதூரம் பயணிக்கும் பயணிகள் நிம்மதியை தொலைக்கிறார்கள்.

    இந்த பிரச்சினை பற்றி ரெயில்வே துறை அதிகாரிகள் கூறிய போது, உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் ஒரு சில நீண்ட தூர ரெயில்களுக்கு வேறு ரெயில் நிலையங்களில் நீர் நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரெயில் பெட்டிகளை கழுவுதல், சுத்தப் படுத்துவதற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றார்.

    ஒரு ரெயில் தொலை தூரத்திற்கு சென்று வர 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இந்த தட்டுப்பாடு காரணமாக ரெயில் பெட்டிகளின் வெளிப்புறம் கழுவுவதற்கு தண்ணீர் கொடுக்கவில்லை.

    சென்னை பேசின்பிரஜ், பராமரிப்பு நிலையத்தில் 45-க்கும் மேற்பட்ட ரெயில்கள் பராமரிக்கப்படு கிறது. இதற்கு நாள் ஒன்றுக்கு 12 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.

    சென்ட்ரலுக்கு சுமார் 10 லட்சம் லிட்டரும், எழும்பூர் ரெயில் நிலையத்தற்கு 10 லட்சம் லிட்டரும் தேவைப்படும். ஆனால் தண்ணீர் தேவையை சமாளிப்பது மிகப்பெரிய சவாலாக இருப்பதாக கூறினார்கள்.

    Next Story
    ×