search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடை விடுமுறையில் குவியும் பொதுமக்கள்-  வ.உ.சி. மைதானத்தில் பூட்டிக்கிடக்கும் கழிவறைகளால் பொதுமக்கள் அவதி
    X

    வ.உ.சி. மைதானத்தில் கழிவறைகள் பூட்டிக்கிடக்கும் காட்சி.

    கோடை விடுமுறையில் குவியும் பொதுமக்கள்- வ.உ.சி. மைதானத்தில் பூட்டிக்கிடக்கும் கழிவறைகளால் பொதுமக்கள் அவதி

    • வ.உ.சி. மைதானத்தில் அம்ருத் திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வ.உ.சி. மைதானம் புதுப்பிக்கப்பட்டு தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றாக பாளை வ.உ.சி. மைதானம் விளங்கி வருகிறது. இந்த மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இங்கு ஏராளமான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் சிறுவர்-சிறுமிகள் விளையாடி மகிழும் வகையில் அம்ருத் திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    இதில் மாலை நேரங்களில் பாளை பகுதியில் உள்ள முதியவர்கள், சிறியவர்கள் மற்றும் பெரும்பாலானோர் குடும்பத்துடன் வந்து பொழுது போக்குவது வழக்கமாக இருந்து வருகிறது. இங்குள்ள சறுக்குகள், ஊஞ்சல்கள் உள்ளிட்டவற்றில் அவர்கள் விளையாடி மகிழ்கின்றனர்.

    ரூ. 14 கோடியில்....

    இதுதவிர ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 14 கோடியில் வ.உ.சி. மைதானம் புதுப்பிக்கப்பட்டு தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கும் ஏராளமானவர்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் நடை பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் விளையாட்டு வீரர்களும் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு இந்த இடத்தை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறாக தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்லும் நிலையில் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் மேலும் அதிகரித்து காணப்படுகிறது.

    கழிப்பிட வசதி

    இவ்வாறு வருபவர்களின் அத்தியாவசிய தேவையான கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதிக்காக மைதானத்தில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு குழாய்கள் உள்ளன. மேலும் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக கழிவறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சோலார் மின் உற்பத்தி விளக்கு, விளையாட்டு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க முதலுதவி அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்குள்ள கழிப்பறைகள் பெரும்பாலும் பூட்டிக் கிடப்பதாகவும், இதனால் மைதானத்திற்கு வரும் அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமம் அடைவதாகவும் ஏராளமானோர் புகார் கூறி வருகின்றனர். இதேபோல் சிலநேரங்களில் அங்குள்ள குடிநீர் தொட்டியில் குழாயை திறந்தால் தண்ணீர் வருவதில்லை என்றும், இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

    இது குறித்து மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி கூறுகையில், இது தொடர்பாக விசாரணை நடத்தி உடனடியாக வ. உ.சி. மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவறைகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    Next Story
    ×