search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
    X

    கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

    • பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது
    • கொடிவேரி அணைப்பகுதியில் 1020 கன அடி தண்ணீர் அணையிர் இருந்து வெளியேறி வருகிறது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையானது பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணையாகும். சுமார் 15 அடி உயரத்தில் இருந்து 300 மீட்டர் நீளத்திற்கு அருவி போல் தண்ணீர் கொட்டுகிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும் ரசிப்பதற்கும் கோபி, சக்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செய்கிறார்கள்.

    அதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் திருப்பூர், கோவை, கரூர், சேலம், நாமக்கல் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள்.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதாலும் அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணைக்கு வருவது வழக்கம்.

    இந்த நிலையில் கோபி நம்பியூர் மற்றும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதே போல் நேற்று மாலை மற்றும் இரவில் கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பலத்த மழை கொட்டியது. மேலும் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    பவானி ஆற்றில் நீர் பிடிப்பு பகுதியில் தொடர் கனமழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கொடிவேரி அணைப்பகுதியில் 1020 கன அடி தண்ணீர் அணையிர் இருந்து வெளியேறி வருகிறது.

    இதனால் பாதுகாப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் வெளியேறி வருவதால் கொடிவேரி அணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு நீர்வளத்துறை அதிகாரிகள் இன்று தடைவிதித்துள்ளனர். இதனால் அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இதையடுத்து இன்று காலை பொதுமக்கள் அணை அருகே உள்ள பாலத்தின் மீது நின்று அணையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை ரசித்தும் புகைப்படம் எடுத்தும் செல்கின்றனர்.

    இதை போன்று அணையின் மேல் பகுதியிலும் கீழ் பகுதியில் பரிசல் இயக்கவும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லுதல் மற்றும் துணித்து வைத்தல் போன்றவைக்கும் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இது குறித்து நுழைவு வாயில் பகுதியில் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×