என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஆதரவற்றோர் விடுதி அருகே 2 பெண் குழந்தைகளை விட்டு சென்றனர்- கல் நெஞ்சம் படைத்தவர்கள் யார்?
- 2 பெண் குழந்தைகள் கடும் குளிரில் அழுது கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே கருணை இல்லம் என்ற ஆதரவற்றோர் விடுதி செயல்பட்டு வருகிறது.
நேற்று நள்ளிரவில் விடுதியின் அருகில் 2 பெண் குழந்தைகளை விட்டு சென்றுவிட்டனர். குழந்தைகளின் அழுகை குரல் கேட்டது. இதனால் விடுதி காப்பாளர்கள் அங்கே சென்று பார்த்தனர். அப்போது 2 பெண் குழந்தைகள் கடும் குளிரில் அழுது கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கருணை இல்ல நிர்வாகம் அந்தப் பெண் குழந்தைகளை மீட்டனர். அப்போது அடையாளம் தெரியாத நபர் தொலைவில் ஓடுவதை கண்டு, கருணை இல்ல நிர்வாகிகள் உடனடியாக அங்கு சென்று பார்த்தனர். அந்த நபர் அங்கிருந்து ஓடிவிட்டார்.
இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தைகளிடம் விசாரணை நடத்தினர். பூர்த்தி வந்தனா (வயது 2), பிருந்தா (1) என்று தங்களது பெயர்களை கூறினர்.
போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் குழந்தைகளை கருணை இல்லத்தில் விட்டுச்சென்ற கல் நெஞ்சம் படைத்தவர்களை தேடி வருகின்றனர்.