என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • எருமை மாடுகள் ஒரே நேரத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றன.
    • ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

    ஜோலார்பேட்டை:

    ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் நள்ளிரவு சென்னையில் இருந்து ஈரோடு நோக்கி புறப்பட்டது.

    ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ரெயில் நிலையத்திற்கு இன்று அதிகாலை 2.28 மணியளவில் வந்தது. பயணிகள் இறங்கிய பின்பு மீண்டும் சிறிது நேரத்தில் ஈரோடு நோக்கி ரெயில் புறப்பட்டு சென்றது.

    திருப்பத்தூர்-மவுகாரம்பட்டி ரெயில் நிலையத்திற்கு இடையே சு.பள்ளிப்பட்டு என்ற இடத்தில் 6 எருமை மாடுகள் ஒரே நேரத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றன.

    அப்போது ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் எருமை மாடுகள் மீது மோதியது. இதில் எருமை மாடுகள் அடிபட்டு இறந்தன. எருமை மாடுகள் உடல் சக்கரத்தில் சிக்கிக்கொண்ட தால் உடனடியாக நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டது.

    தகவல் அறிந்த திருப்பத்தூர் ரெயில் நிலைய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரெயிலில் சிக்கிய 6 எருமை மாடுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் 2 மணி நேரம் தாமதமாக 4.55 மணியளவில் ஈரோடு நோக்கி புறப்பட்டு சென்றது.

    இதன் காரணமாக ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் ரெயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம், ஆலப்புழை வரை செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் கேரள மாநிலம் செல்லும் திருவனந்தபுரம் சபரி எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரெயில்களும் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் சுமார் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டன.

    அதன்பிறகு ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் ரெயில் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். 

    • மர்மகும்பல் அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர்.
    • இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த முஸ்லீம்பூர் பகுதியை சேர்ந்தவர் இர்பான் (வயது40). இவருக்கு திருமணம் ஆகி ஆஜிரியா என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர்.

    இக்பால் சாலையில் உள்ள தனியார் நர்ஸரி மற்றும் பிரைமரி பள்ளியில் இர்பான் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை இர்பான், வழக்கம்போல் தனது சைக்கிளில் பள்ளிக்கு சென்றார்.

    அப்போது எதிரே பைக்கில் வந்த மர்மகும்பல் அவரை வழிமடக்கி தகராறில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மர்ம கும்பல் இர்பானை சைக்கிளில் இருந்து கீழே தள்ளிவிட்டனர்.

    தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அவரது வயிற்றில் குத்தினர். வலி தாங்க முடியாமல் அலறி கூச்சலிட்டபடி எழுந்து ஓடினார்.

    அப்போது மர்ம கும்பல் விடாது துரத்தி சென்று, ஓட, ஓட விரட்டி சென்று இடுப்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினர். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த இர்பான் துடிதுடித்து இறந்தார்.

    அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் ஓடிவந்தனர். பொதுமக்கள் வருவதை கண்டதும் மர்ம கும்பல், இர்பான் இடுப்பில் குத்திய கத்தியை விட்டு, விட்டு அங்கிருந்து பைக்கில் தப்பி சென்று தலைமறைவாகி விட்டனர்.

    இது குறித்து தகவலறிந்து வாணியம்பாடி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இர்பான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து இர்பான் வேலை செய்யும் தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • பஸ் பின்னால் மாணவி நீண்ட தூரம் ஓடி வந்ததை பார்த்து பஸ்சை ஓட்டுநர் நிறுத்தினார்.
    • கிராம நிறுத்தத்தில் அரசு பஸ் பல நேரங்களில் நிறுத்தப்படுவதே இல்லை என மக்கள் புகார் தெரிவித்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கோத்தக்கோட்டையில் அரசு பஸ் உரிய இடத்தில் நிற்காமல் சென்றதால் அதன் பின்னாலேயே பிளஸ் 2 மாணவி நீண்ட தூரம் ஓடினார்.

    பஸ் பின்னால் மாணவி நீண்ட தூரம் ஓடி வந்ததை பார்த்து பஸ்சை ஓட்டுநர் நிறுத்தினார். மாணவி அதில் ஏறிய வீடியோ வைரலானது.

    கிராம நிறுத்தத்தில் அரசு பஸ் பல நேரங்களில் நிறுத்தப்படுவதே இல்லை என மக்கள் புகார் தெரிவித்தனர்.

    பொதுத்தேர்வுக்கு சென்ற பிளஸ் 2 மாணவி பஸ் பின்னாலேயே ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பஸ் ஓட்டுநர் - நடத்துநரை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

    • தமிழ்நாடு அரசின் வருவாய் இழப்பு 1000 கோடி என்ற செய்தி வந்துகொண்டு இருக்கின்றது.
    • ஈகோ பிடித்த தலைவர்கள் ஈகோவை விட்டுகொடுத்து கட்சி நலனுக்காக செயல்பட வேண்டும்.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    டாஸ்மாக்கில் இருந்து வரி கட்டிய மதுபானங்கள், பெறுவது தான் அரசின் நடவடிக்கையாக இருந்தது, வரிகட்டாத டாஸ்மாக் மதுபானங்கள் இன்றைக்கு சில்லறை விற்பனை கடைகளில் வருவது மூலமாக கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் என்ற அளவிற்கு முறைகேடு நடைப்பெறுவதாக செய்திகள் வருகிறது.

    அரசுக்கு வரவேண்டிய நியாயமான வரிகள், மறுக்கப்பட்டு,வேறு இடங்களுக்கு அந்த வரிகள் செல்வதனால், தமிழ்நாடு அரசின் வருவாய் இழப்பு 1000 கோடி என்ற செய்தி வந்துகொண்டு இருக்கின்றது. அதனை தடுக்கும் பொறுப்பு தி.மு.க அரசுக்கு இருக்கின்றது.

    அ.தி.மு.க.எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, வருங்காலத்தில் சிறப்பாக செயல்பட சட்டவிதிகளை வரையறுத்தார்கள், அதை தான் ஜெயலலிதாவும் கடைபிடித்தார்கள். அப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க அ.தி.மு.க. இன்றைக்கு பல்வேறு பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றது.

    பிரிந்த அ.தி.மு.க. ஒன்றிணைந்து, எந்த நோக்கத்திற்காக எம்.ஜி.ஆர் உருவாக்கினார்களோ, அதற்காக பாடுபட வேண்டும். ஜெயலலிதாவின் ஆட்சி 2026-ல் வர வேண்டும் என்றால், அ.தி.மு.க.வில் பிரிந்த சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும்.

    அதுதான் அ.தி.மு.க. தொண்டர்களின் கருத்து. அவரவர் மனதில் உள்ள ஈகோவை உதறிதள்ளிவிட்டு, தலைவர் காட்டிய வழியில் செல்ல வேண்டும். ஈகோ பிடித்த தலைவர்கள் ஈகோவை விட்டுகொடுத்து கட்சி நலனுக்காக செயல்பட வேண்டும்.

    அனைவரும் ஒன்றிணைந்து 2026-ல் அ.தி.மு.க ஆட்சி மலரசெய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்டென சாலையை குறுக்கிட்ட நாயால் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் நூலிழையில் உயிர் தப்பினர்.
    • விபத்து தொடர்பான சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டம் கலைஞர் நகரில் சட்டென சாலையை குறுக்கிட்ட நாயால் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் நூலிழையில் உயிர் தப்பினர்.

    சாலையின் குறுக்கே நாய்கள் ஓடியதால் பைக், கார், லாரி என அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் பின்னல் அமர்ந்து வந்த பெண் நிலைதடுமாறி கீழ விழுந்தார். இதை கவனித்த கார் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தினார். அதற்கு பின்னல் வேகமாக லாரி கார்மீது மொத, கார் பைக் மீது மோதியது. இதனால் பைக்கை ஓட்டி வந்த நபர் தடுமாறி கீழே விழுந்தார்.

    நல்வாய்ப்பாக பைக்கில் வந்த இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இது தொடர்பான சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    • பலத்த வெட்டு காயங்களுடன் திருப்பதி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
    • தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், மேற்கத்தியனூர் அருகே உள்ள கோ.புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி (வயது 50).

    தி.மு.க. நிர்வாகியான இவர் கோ.புளியம்பட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக உள்ளார். இவருடைய மனைவி வசந்தி (40). இவரது பிள்ளைகள் திருமணம் ஆகி தனியாக வசித்து வரும் நிலையில், திருப்பதி மற்றும் வசந்தி ஆகியோர் மட்டும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

    நேற்று இரவு வழக்கம் போல் வீட்டின் கதவை லேசாக சாத்திவிட்டு இருவரும் தூங்கினர்.

    இன்று அதிகாலை 3 மணி அளவில் திருப்பதி வீட்டில் மர்ம கும்பல் புகுந்தனர். தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திருப்பதி மற்றும் அவரது மனைவி ஆகிய 2 பேரையும் சரமாரியாக வெட்டினர். இதில் வலி தாங்க முடியாமல் 2 பேரும் கத்தி கூச்சலிட்டனர்.

    அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை பார்த்த கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.

    ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த வசந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த வெட்டு காயங்களுடன் திருப்பதி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதனை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் திருப்பதியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வசந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவ இடத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணை குறித்து அவர்கள் கூறியதாவது:-

    திருப்பதி வீட்டிற்கு முன்பு சுமார் 70 சென்ட் அளவிலான நிலம் உள்ளது. அந்த இடம் சம்பந்தமாக கடந்த 2 நாட்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    இந்த நிலத்திலிருந்து தனக்கு 12 அடி அளவில் வழி வேண்டும் என்று திருப்பதி கேட்டு வந்தார்.

    இன்று அந்த வழிக்கான பத்திர பதிவு நடக்க இருந்தது. இந்த நிலையில் இன்று மர்ம கும்பல் திருப்பதி மற்றும் அவருடைய மனைவி ஆகிய 2 பேரையும் திட்டமிட்டு வெட்டியுள்ள சம்பவம், அந்த நிலத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மனைவி வசந்தி நிலப் பிரச்சனை சம்பந்தமாக வெட்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் பெண்கள் பொது பெட்டியில் ஏறி பயணம் செய்தார்.
    • ரெயிலில் இருந்து கீழே விழுந்த ரேவதிக்கு கை, கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ஜோலார்பேட்டை:

    திருப்பூரை சேர்ந்தவர் ஜமினி ஜோசப். இவரது மனைவி ரேவதி. இவர் வீட்டிலேயே டெய்லரிங் வேலை செய்து வருகிறார். தற்போது ரேவதி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்த நிலையில் ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த மங்கள சமுத்திரத்தில் உள்ள தாயார் வீட்டிற்கு செல்ல ரேவதி முடிவு செய்தார். அதன்படி கணவருடன் ரேவதி திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு நேற்று அதிகாலை வந்தார்.

    திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் பெண்கள் பொது பெட்டியில் ஏறி பயணம் செய்தார். ரெயில் ஜோலார்பேட்டை வந்தவுடன் சக பெண் பயணிகள் இறங்கிவிட்டனர். ரேவதி மட்டும் தனியாக இருந்தார்.

    வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தை சேர்ந்த ஹேமராஜ் (வயது 28) என்பவர் பெண்கள் பொது பெட்டியில் ஏறினார். அப்போது ரேவதி இது பெண்கள் பெட்டி என்று கூறினார். அதற்கு ஹேமராஜ் அவசரமாக ஏறி விட்டதாகவும், அடுத்த ரெயில் நிலையம் வந்தவுடன் இறங்கி விடுவதாக கூறி அங்கும் இங்கும் சுற்றி திரிந்தார்.

    சிறிது நேரத்திற்கு பின்னர் ரெயில் பெட்டியின் கழிவறைக்கு சென்றார். பேண்ட் மற்றும் சட்டை இல்லாமல் ரேவதியின் முன்னால் அரை நிர்வாணத்துடன் வந்து நின்றார். இதனால் அதிர்ச்சியடைந்த கர்ப்பிணி கத்தி கூச்சலிட்டார். திடீரென ரேவதியை சரமாரியாக வாலிபர் தாக்கினார்.

    கர்ப்பிணி என்றும் பாராமல் அவரிடம் தவறாக நடக்க முயன்றார். வாலிபரிடமிருந்து தப்பிக்க கர்ப்பிணி போராடினார்.

    இதில் ஆத்திரமடைந்த ஹேமராஜ் அவரது தலைமுடியை பிடித்து இழுத்து ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார். ரெயில் காட்பாடி வந்தவுடன் ஹேமராஜ் அங்கிருந்து இறங்கி தப்பி சென்றார்.

    ரெயிலில் இருந்து கீழே விழுந்த ரேவதிக்கு கை, கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடி வந்து ஜோலார்பேட்டை ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த கர்ப்பிணியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து ரெயில்வே எஸ்.பி. உத்தரவின் பேரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு ஹேமராஜை தேடி வந்தனர். காட்பாடி பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஹேமராஜை இன்று அதிகாலை அவரது வீட்டின் அருகே சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஹேமராஜ் கடந்த 2022-ம் ஆண்டு சென்னையில் இருந்து ரெயிலில் பயணம் செய்த பெண்ணிடம் செல்போன் பறித்ததும், காட்பாடி அருகே வந்தவுடன் இளம்பெண்ணை ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதும் தெரிந்தது.

    2023-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து காட்பாடிக்கு அழைத்து வந்ததும், அங்கு வைத்து இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து ஜாமினில் வெளியே வந்ததும் தெரிந்தது. மேலும் இது சம்பந்தமாக போலீசார் ஹேமராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சித்தார்த்‌ தனது பைக்கை திரும்ப பெற திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்திய போது அவர் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டி வந்தது தெரியவந்தது.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அடுத்த வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சித்தார்த் (வயது19). இவர் தனது பைக்கை புதிய ரகத்தில் வடிவமைப்பு செய்து திருப்பத்தூர் டவுன் பகுதியில் வண்டியை ஓட்டி வந்தார்.

    பைக்கின் நிறத்தை மாற்றி, புதிய தோற்றத்தை உருவாக்கியதோடு முகப்பு விளக்கு மற்றும் வாகன எண்ணில் (நம்பர் பிளேட்) மண்டை ஓடு இருப்பது போல புதிய உருவ தோற்றத்தை உருவாக்கி இருந்தார். இந்த பைக்கின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் பைக்கை பறிமுதல் செய்து, திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    இதனைத் தொடர்ந்து சித்தார்த் தனது பைக்கை திரும்ப பெற திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது போலீசார் விசாரணை நடத்திய போது அவர் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டி வந்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி சிறுவனுக்கு, திருக்குறளை எழுத்துப்பிழை இல்லாமல் கூறிவிட்டு வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு நூதன தண்டனை கொடுத்தார். அதன்படி சித்தார்த் திருக்குறளை போலீசாரிடம் ஒப்புவித்தார்.

    பின்னர் போலீசார் சிறுவனை, இனிமேல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வண்டியை ஓட்டக்கூடாது. இது போன்ற வடிவமைப்புகளில் வாகனங்களை மாற்றக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

    • குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திடீரென சாலைமறியலில் ஈட்டுபட்டனர்.
    • வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு அணிவகுத்து நின்றன.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி ஆதிதிராவிடர் பகுதியில் பெயர் பலகையில் அம்பேத்கர் உருவபடம் வரையப்பட்டுள்ளது.

    இதில் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில், படம் பெயர் பலகை மீது மர்மநபர்கள் மாட்டு சாணத்தை வீசி அவமதித்து உள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக தேசிய நெடுஞ்சாலையில் ஒன்று திரண்டனர். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திடீரென சாலைமறியலில் ஈட்டுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார், விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவர்த்தை நடத்தினர்.

    இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு அணிவகுத்து நின்றன. போக்குவரத்து கடுமையாக பாதித்தது. போலீசார் போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 2 பெண் குழந்தைகள் கடும் குளிரில் அழுது கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே கருணை இல்லம் என்ற ஆதரவற்றோர் விடுதி செயல்பட்டு வருகிறது.

    நேற்று நள்ளிரவில் விடுதியின் அருகில் 2 பெண் குழந்தைகளை விட்டு சென்றுவிட்டனர். குழந்தைகளின் அழுகை குரல் கேட்டது. இதனால் விடுதி காப்பாளர்கள் அங்கே சென்று பார்த்தனர். அப்போது 2 பெண் குழந்தைகள் கடும் குளிரில் அழுது கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    கருணை இல்ல நிர்வாகம் அந்தப் பெண் குழந்தைகளை மீட்டனர். அப்போது அடையாளம் தெரியாத நபர் தொலைவில் ஓடுவதை கண்டு, கருணை இல்ல நிர்வாகிகள் உடனடியாக அங்கு சென்று பார்த்தனர். அந்த நபர் அங்கிருந்து ஓடிவிட்டார்.

    இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தைகளிடம் விசாரணை நடத்தினர். பூர்த்தி வந்தனா (வயது 2), பிருந்தா (1) என்று தங்களது பெயர்களை கூறினர்.

    போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் குழந்தைகளை கருணை இல்லத்தில் விட்டுச்சென்ற கல் நெஞ்சம் படைத்தவர்களை தேடி வருகின்றனர்.

    • கடன் கேட்டு கொடுக்காததால் கூலிப்படையை ஏவி கொலை.
    • 5 பேர் கைது, 2 கார்கள், வீச்சரிவாள், கத்தி பறிமுதல்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள காசிகவுண்டன்புதூர் தாமரை கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ள னர். ஊட்டியை பூர்வீகமாக கொண்ட ரமேஷ், திருப்பூரில் வீட்டில் இருந்தபடியே கார் கன்சல்டிங் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.

    இந்நிலையில், கடந்த 1-ந்தேதி அதிகாலை நடைபயிற்சி சென்ற போது அவினாசி 6 வழிச்சாலையில் வைத்து காரில் வந்த மர்ம நபர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக ரமேசை வெட்டிக்கொன்றனர்.

    இந்த கொடூர கொலை வழக்கில் முதற்கட்டமாக, திருவாரூர் மாவட்டம் அறித்துவாரமங்கலம் பகுதியை சேர்ந்த கோபால கிருஷ்ணன் (35), மன்னார்குடி பகுதியை சேர்ந்த அஜீத் (27), அதே பகுதியை சேர்ந்த சிம்போஸ் (23), சரண் (24) மற்றும் தேனி மாவட்டம் சில்லு வார்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் (45) ஆகிய 5 பேரை அவினாசி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய 2 கார்கள், வீச்சரிவாள் மற்றும் கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடததிய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தது.ரமேசுக்கும், இர்பான் என்பவருக்கும் பணம்-கொடுக்கல் வாங்கல் பிரச்சினை மற்றும் சேவூரில் இடப்பிரச்சினை இருந்து வந்தது.

    மேலும் இர்பான் ரமேசிடம் பெரிய தொகையை கடன் கேட்டு ள்ளார். அதற்கு பிணையாக பத்திரமோ பொருளோ இல்லாமல் பெரிய தொகை தர முடியாது என ரமேஷ் மறுத்ததோடு இர்பானை தகாத வார்த்தைகளில் பேசி உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், தனது நண்பர் அரவிந்தன் என்பவரிடம் தெரிவித்தார். இதையடுத்து ரமேசுக்கு உயிர் பயத்தை காட்டும் வகையில் அவரை மிரட்ட 2பேரும் முடிவு செய்தனர்.

    இதற்காக கூலிப்படையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் அஜீத், சிம்போஸ், சரண், மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோரிடம் ரூ.4 லட்சம் பணம் கொடுத்துள்ளனர்.

    மேலும் ரமேசை கை, கால்களில் மட்டும் வெட்டு மாறு கூறியுள்ளனர். ஆனால் கூலிப்படையினர் 5 பேரும் ரமேசின் தலையில் வெட்டியதால் அவர் உயிரிழந்தார்.

    கொலைக்கு திட்டம் வகுத்த முதல் மற்றும் இரண்டாம் குற்றவாளிகளான இர்பான், அரவிந்தன் ஆகிய 2பேரை போலீசார் இன்று கைது செய்தனர். கடன் கேட்டு கொடுக்காததால் கூலிப்படையை ஏவி, தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • சாலையில் சென்று கொண்டிருந்தபோது தீவிபத்து ஏற்பட்டது.
    • தனியார் சொகுசு பேருந்து தீப்பற்றி எரிந்து முழுமையாக நாசமானது.

    சென்னையிலிருந்து பெங்களூருக்கு 36 பயணிகளுடன் தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

    திருப்பத்தூர் மாவட்டம் லட்சுமிபுரத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அதிகாலை 4 மணியளவில் திடீரென பேருந்தில் தீவிபத்து ஏற்பட்டது.

    சாலையில் சென்று கொண்டிருந்தபோது தீவிபத்து ஏற்பட்ட நிலையில், பயணிகள் அனைவரும் பத்திரமாக இறங்கி உயிர் தப்பினர்.

    தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தனியார் சொகுசு பேருந்து தீப்பற்றி எரிந்து முழுமையாக நாசமானது.

    இந்த தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×