search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூரில் நான் முதல்வன் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு
    X

    பெரம்பலூரில் நான் முதல்வன் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு

    • பெரம்பலூரில் நான் முதல்வன் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு 10-ந் தேதி தொடங்குகிறது
    • போட்டி தேர்வு எழுதுபவர்களின் வசதிக்கேற்ப மாவட்ட அளவில் 2 மையங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில், மத்திய அரசின் பணிகளுக்கான போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு மாவட்ட அளவில் நடத்த மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட மன்றத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி கூறியதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகள் பிரிவு எனும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    இதில் மத்திய அரசின் பணிக்கான தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.), ரெயில்வே பணி தேர்வாணையம், வங்கி பணிகளுக்கான தேர்வாணையம் ஆகியவை நடத்தும் தேர்வுகளில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 10-ந்தேதி தொடங்கி, தொடர்ந்து 3 மாதங்கள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வு எழுதுபவர்களின் வசதிக்கேற்ப மாவட்ட அளவில் 2 மையங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் கூடுதல் அரங்கத்திலும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் வேப்பூர் வட்டார ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்திலும் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு மையத்திலும் 150 மாணவர்கள் அல்லது இளைஞர்கள் சேர்க்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுவார்கள். மாணவர்கள் பதிவுகள் தொடர்பாக தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகம் மூலம் ஆன்லைன் இணைப்பு (லிங்க்) வழங்கப்படும்.

    150 மாணவர்களுக்கு மேல் பதிவுகள் நிகழ்ந்திருந்தால், மாணவர்களுக்கு திறனறித் தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பயிற்சி மையங்களுக்கு மாணவர்கள் சுலபமாக வந்து செல்லும் வகையில் போதிய போக்குவரத்து வசதி மற்றும் தேவையான அடிப்படை கட்டமைப்புகள் அனைத்தும் சிறப்பாக ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×