என் மலர்
பெரம்பலூர்
- தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
- சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்கவில்லை
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு விடுமுறை அளிக்கலாம் அல்லது இரட்டிப்பு சம்பளம் வழங்கி பணியில் ஈடுபடுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதை உதவி ஆணையர் (அமலாக்கம்) கா.மூர்த்தி தலைமையில் தொழிலாளர் துணை ஆணையர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், பெரம்பலூர் மாவட்டங்களில் திடீர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் 33 நிறுவனங்கள் தொழிலாளர் சட்ட விதிமுறையை கடைபிடிக்காதது கண்டறியப்பட்டு, அந்த நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
- மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் 32 பேர் கைது செய்யப்பட்டனர்.
- குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை
பெரம்பலூர்:
பெரம்பலூர் நகாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பெரம்பலூர் நகர அ.தி.மு.க.வினர் நகர செயலாளர் ராஜபூபதி தலைமையில் நகராட்சி அலுவலகத்துக்கு சென்று சீராக குடிநீர் விநியோகம் செய்ய கோரி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மனோகரனிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து பெரம்பலூர் நகரில் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்யாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்ம் குடிநீர் வரி வசூலிப்பதை கைவிடக்கோரியும் புதிய பேருந்து நிலையம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 32 பேரை போலீசார் கைது செய்தனர்.
- இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
- 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் பெற்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் திருச்சி அட்லஸ் மருத்துவமனை, செட்டிகுளம் லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாமை நடைபெற்றது. முகாமை செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் கலாதங்கராசு,ஒன்றியக்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த முகாமில் செட்டிகுளம்,பொம்மனப்பாடி,சத்திரமனை, நாட்டார்மங்கலம் கூத்தனூர் ஆலத்தூர்கேட் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
- வி.களத்தூர் இந்து-முஸ்லிம் பிரமுகர்களுக்கு நல்லிணக்க விருந்து நடைபெற்றது.
- செல்லியம்மன் கோவில் திருவிழா
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூரில் அமைந்துள்ள செல்லியம்மன் கோவில் திருவிழாவில் மத நல்லிணக்கத்தை நிலைநாட்டும் வகையில், இந்து, முஸ்லிம் ஆகிய இரு தரப்பினரிடையே கடந்த 110 ஆண்டுகளாக இருந்த பிரச்சினைகளை நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் இரு தரப்பு மக்களையும் அழைத்து நடத்திய அமைதி பேச்சுவார்த்தையின் அடிப்படையிலும் சுமூக தீர்வு காணப்பட்டது. அதனை தொடர்ந்து இந்து சமய பெரியோர்கள் முன்னிலையில், முஸ்லிம் ஜமாஅத் பெரியோர்கள் ஒத்துழைப்புடன் செல்லியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்வு மத நல்லிணக்கத்தை நிலைநாட்டும் வகையில் அமைந்திருந்தது. கோவில் திருவிழாவிற்கு ஒத்துழைப்பு வழங்கிய முஸ்லிம் பிரமுகர்களுக்கும், திருவிழாவை ஒற்றுமையோடு அமைதியாக நடத்திய இந்து சமய பிரமுகர்களுக்கும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி பெரம்பலூரில் ஒரு உணவகத்தில் மத நல்லிணக்க விருந்து வைத்தார். இதில் வி.களத்தூரை சேர்ந்த இந்து, முஸ்லிம் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும் அவர்கள் போலீஸ் சூப்பிரண்டுடன் கலந்துரையாடி குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்வு காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது.
- போதைப்பொருள்களை ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது
பெரம்பலூர்:
பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள 121 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூா் ஒன்றியம், ஆலம்பாடி ஊராட்சிக்குள்பட்ட செஞ்சேரி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்று கலெக்டர் பேசியதாவது:
மாவட்டத்தில் பிறந்தது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு அல்லது மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் என பிரித்து, கண்காணித்து ஒவ்வொருவருக்கும் அறிக்கை தயாா் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆலம்பாடி ஊராட்சியில் 12 குழந்தைகள் மிதமான ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவா்களாகக் கண்டறியப்பட்டுள்ளனா். சத்துக் குறைபாடு கண்டறியப்பட்ட 12 தாய்மாா்களும், ஊட்டச்சத்து அலுவலா்களின் வழிமுறைகளை கையாள வேண்டும். மிதமான ஊட்டச்சத்து குறைபாடு இருந்தாலும், அதை கவனத்தில்கொண்டு மருத்துவரை அணுகி தேவையான உணவு உட்கொள்ள வேண்டும்.
போதைப்பொருள்கள் இல்லாத மாவட்டத்தை உருவாக்குவது குறித்து பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வட்டார அளவில் சிறப்புக் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. போதைப் பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் காவல்துறை அல்லது அரசு அலுவலகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போதைப் போருள்களை முற்றிலும் ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என்றாா் அவா்.
- பெரம்பலூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
பெரம்பலூர்:
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பெரம்பலூர் துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் இங்கிருந்து மின்சார வினியோகம் பெறும் பெரம்பலூர் நகர் பகுதிகளான புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சங்குபேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின் நகர், நான்கு ரோடு, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, வடக்கு மாதவி, வடக்கு மாதவி ரோடு, சிட்கோ தொழிற்பேட்டை, துறையூர் சாலை, அரணாரை, அரசு தலைமை மருத்துவமனை, ஆலம்பாடி ரோடு, அண்ணா நகர், கே.கே.நகர், அபிராமபுரம், வெங்கடேசபுரம், இந்திராநகர், போலீஸ் குடியிருப்பு, எளம்பலூர், சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- உலக அமைதிக்கான வேள்வி நடைபெற்றது.
- மனவளக்கலை மன்றம் சார்பில் நடைபெற்றது
பெரம்பலூர்:
உலக மக்கள் அனைவரும் அமைதியாக வாழ வழி செய்திட வேண்டும் என்ற நோக்கத்துடன், தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி கடந்த 1958-ம் ஆண்டு உலக சேவா சமுதாய சங்கத்தை உருவாக்கிய வேதாத்திரி மகரிஷி பிறந்த தினத்தை மனவளக்கலை மன்றத்தினர் உலக அமைதி தினமாக கடைபிடித்து வருகின்றனர். இதனை முன்னிட்டு பெரம்பலூர் மனவளக்கலை மன்றம் சார்பில் அறிவு திருக்கோவிலில் உலக அமைதிக்கான வேள்வி நடந்தது. நிகழ்ச்சிக்கு மன்ற தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மன்ற செயலாளர் சாந்தகுமார் வரவேற்றார். உலகம் அமைதி பெற வேண்டி பேராசிரியர் பத்மாவதி தவவேள்வி நடத்தினார். பேராசிரியர் சுந்தர், ஞான ஆசிரியரின் சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார். இதில் துணை தலைவர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்."
- மாணவர்கள் எதிர்கால இலக்குகளை முடிவு செய்து லட்சியத்துடன் செயல்பட வேண்டும் என்று தொழிலதிபர் தெரிவித்துள்ளார்
- ஊக்கத்தொகையும் வழங்கி பாராட்டினார்
பெரம்பலூர்:
இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தின விழா வழக்கத்தை விட கூடுதல் உற்சாகத்துடன் நேற்று கொண்டாடப்பட்டது. அதன் ஒருபகுதியாக பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா நடைபெற்றது.
விழாவில் மலேசியா தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் அவர் மாணவர்களுக்கு நோட்டு, பேனா உள்ளிட்ட வைகளையும், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கி பாராட்டினார்.
பின்னர் அவர் பேசுகையில், மாணவர்கள் தங்கள் எதிர்கால இலக்குகளை முடிவு செய்து தற்போதிருந்தே லட்சியத்துடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் பூலாம்பாடி அரசு பள்ளியில் பயின்று மருத்துபடிப்பிற்கு நீட் தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு தான் உதவிகளை செய்து தர தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதைத்தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.இந்த விழாவில் பள்ளிதலைமை ஆசிரியர் சேகர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மோகன், பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி செங்குட்டுவன், கவுன்சிலர் கலைச்செல்வி பாலகிருஷ்ணண் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், ஊர் பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.
- சாப்பாடு தரக்கூட யாரும் முன்வராததால் ராஜேந்திரன் பெரிதும் விரக்தியடைந்தார்.
- ஒரு நாள் வியாபாரத்திற்கு செல்லும் அவர் கிடைக்கும் வருவாயை முழுவதுமாக மது குடிக்க செலவழித்தார். இதனால் அவரது உடல் நிலையும் பாதிக்கப்பட்டது.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கோவில்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60). பானி பூரி வியாபாரியான இவர் திருவிழா காலங்களில் தனது உறவினர்களுடன் சேர்ந்து கூடுதல் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தார்.
இவர் ஆசைக்கு ஒன்று, அழகுக்கு ஒன்று, அந்தஸ்துக்கு ஒன்று என அதே பகுதியை சேர்ந்த சகுந்தலா, செல்வி, சித்ரா ஆகிய 3 பேரை குறிப்பிட்ட கால இடைவெளியில் திருமணம் செய்து கொண்டார்.
இதில் செல்விக்கு ஒரு மகன், ஒரு மகளும், சித்ராவுக்கு ஒரு மகனும் உள்ளனர். அவர்களும் வளர்ந்து ஆளாகி திருமணத்திற்கு தயாராகி வருகிறார்கள். இதற்கிடையே மதுவுக்கு அடிமையான ராஜேந்திரன் பானி பூரி வியாபாரம் செய்து கிடைக்கும் வருவாயில் பெரும் பகுதியை குடித்தே அழித்து வந்தார். இதனால் 3 மனைவிகளுக்கும் குடும்பம் நடத்த சரியாக பணம் கொடுப்பதில்லை. இதனால் ராஜேந்திரனை முதலில் திருமணம் செய்து கொண்ட சகுந்தலா கணவரை பிரிந்து, அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வாலிபருடன் ஓட்டம் பிடித்தார்.
அப்போது முதலே மற்ற இரண்டு மனைவிகள் மற்றும் பிள்ளைகள் ராஜேந்திரனை வெறுக்க தொடங்கினர். நாளுக்கு நாள் முழு நேரமும் மது போதையில் திளைத்த ராஜேந்திரனை அவரது 2 மனைவிகள் மற்றும் உறவினர்கள் என யாரும் கண்டுகொள்ளவில்லை.
மேலும் சாப்பாடு தரக்கூட யாரும் முன்வராததால் ராஜேந்திரன் பெரிதும் விரக்தியடைந்தார். ஒரு நாள் வியாபாரத்திற்கு செல்லும் அவர் கிடைக்கும் வருவாயை முழுவதுமாக மது குடிக்க செலவழித்தார். இதனால் அவரது உடல் நிலையும் பாதிக்கப்பட்டது.
ஒரு வேளை உணவுக்கும் வழியின்றி, அனைவரும் வெறுத்து ஒதுக்கியதால் மனம் உடைந்த ராஜேந்திரன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதன்படி குன்னத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி வந்து, அதனுடன் விஷம் கலந்து குடித்தார். மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குன்னம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
3 மனைவிகள், பிள்ளைகள் இருந்தும் ஒருவேளை உணவு கூட தராமல் குடும்பத்தினர் ஒதுக்கியதால் மனமுடைந்த பானி பூரி வியாபாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கி கிடந்தார்.
- திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் ஆத்தூர் பஸ்கள் நிற்கும் இடத்தில் கடந்த 2-ந்தேதி சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கி கிடந்தார். இதனை கண்டவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 12-ந்தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பெரம்பலூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் அகிலன் பெரம்பலூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சியப்பன் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
- ஓய்வூதியர்களுக்கு வழங்குகிற குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
பெரம்பலூர் :
பெரம்பலூரில், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் 4-வது மாவட்ட மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆளவந்தார் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு மாநில பணி நிறைவு சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் இளவரசன் சங்கத்தின் வேலை அறிக்கையை வாசித்தார். மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் சங்கத்தின் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். மாநில செயலாளர் மனோகரன் வாழ்த்தி பேசினார்.
தி.மு.க. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளான அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வழங்குகிற குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.
மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்குவது போல் மாநில அரசும் மாதந்தோறும் மருத்துவ படியாக ரூ.1,000 வழங்கிட வேண்டும். ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டத்தை பெரம்பலூர் மாவட்ட கலெக்டரே நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
- ரெங்கராஜ்பசுமாடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வெங்கனூர்-ஆத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
- சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த முகேஷ் என்பவர் ஓட்டி வந்த கார், எதிர்பாராதவிதமாக அந்த மாடு மீது மோதியது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கனூரை சேர்ந்தவர் ரெங்கராஜ் (வயது 65). விவசாயி. இவர் பசுமாடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வெங்கனூர்-ஆத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த முகேஷ் என்பவர் ஓட்டி வந்த கார், எதிர்பாராதவிதமாக அந்த மாடு மீது மோதியது. இதில் மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தது.
இது குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






