search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அப்துல் கலாம் பிறந்த நாளன்று பிரதமர் மோடி பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்கிறார்?
    X

    அப்துல் கலாம் பிறந்த நாளன்று பிரதமர் மோடி பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்கிறார்?

    • புதிய ரெயில் பாலத்தின் நீளம் 2,078 மீட்டர் ஆகும்.
    • செங்குத்தான தூக்குப்பாலம் நாட்டிலேயே முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ளது.

    மண்டபம்:

    தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் நிலப்பரப்பையும், பாம்பன் தீவையும் இணைக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் கடந்த 1914-ம் ஆண்டு ரெயில் பாலம் கட்டப்பட்டது.

    நூற்றாண்டுகளை கடந்த இந்த ரெயில் பாலத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு வந்தன. இதன் காரணமாக ரெயில் போக்குவரத்து அவ்வப்போது தடைபட்டது.

    பாம்பன் தீவில் உள்ள ராமேசுவரம் கோவிலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், வியாபாரிகள் சிரமமடைந்தனர்.

    இந்தநிலையில் பழைய பாலத்திற்கு பதிலாக புதிய ரெயில் பாலம் கட்ட ரெயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது. இதற்காக ரூ.550 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் புதிய ரெயில் பாலம் கட்டும் பணிகள் தொடங்கியது. நூற்றுக்கும் மேற்பட்ட என்ஜினீயர்கள் மேற்பார்வையில், 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு, பகலாக இப்பணியில் ஈடுபட்டனர். புதிய ரெயில் பாலத்தின் நீளம் 2,078 மீட்டர் ஆகும்.

    கடல் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரம் கொண்ட புதிய ரெயில் பாலத்தை 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்கள், 99 இணைப்பு கர்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    புதிய ரெயில் பாலத்தின் நடுவே நவீன வசதியுடன் செங்குத்தான தூக்குப்பாலம் நாட்டிலேயே முதல்முறையாக அமைக்கப் பட்டுள்ளது.

    இந்த தூக்கு பாலத்தை மனித உழைப்பின்றி மோட் டார்கள் மூலம் ஹைட்ராலிக் லிப்ட் வசதியுடன் இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. தூக்குப் பாலத்தை 3 நிமிடத்தில் திறந்து 2 நிமிடத்தில் மூட லாம்.

    இதே போல் தூக்குப்பா லம் அருகிலேயே ஆப்பரேட்டர் அறை, மின்மாற்றி அறை அமைக்கப்பட்டுள்ளன. 4 வருட தீவிர கட்டுமான பணிக்கு பின் தற்போது பால பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

    புதிய ரெயில் பாலத்தின் உறுதி தன்மையை சோதனை செய்யும் வகையில் கடந்த மாதம் சோதனை ரெயில் ஓட்டம் மற்றும் தூக்கு ரெயில் பாலம் வெற்றிகரமாக இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

    பாம்பன் புதிய ரெயில் பாலம் அக்டோபர் மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    அதற்கேற்ற வாறு தற்போது பாலப்பணிகள் முடிவடைந்துள்ளதால் அதற்கான திறப்பு விழா குறித்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தென்னக ரெயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவஷ்தவா நேற்று புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்தார்.

    மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், மண்ணின் மைந்தருமான அப்துல்கலாம் பிறந்தநாளான அக்டோபர் 15-ந்தேதி பிரதமர் மோடி பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்துவைத்து நாட்டுக்கு அர்பணிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


    இதற்கான விழா பாம்பனில் நடைபெற உள்ளது. மேடை அமைக்கும் இடம், ஹெலிகாப்டர் நிறுத்துவதற்கான ஹெலிபேடு வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்னக ரெயில்வே மேலாளர் ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரிகள் கூறுகையில், வரலாறு சிறப்பு வாய்ந்த புதிய பாம்பன் ரெயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க பாம்பன் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை.

    இருப்பினும் பிரதமர் விழாவில் பங்கேற்றால் அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இந்த மாதம் இறுதிக்குள் புதிய ரெயில் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.

    Next Story
    ×