search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறைகளில் போலீசார் சோதனை
    X

    கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறைகளில் போலீசார் சோதனை

    • அறையில் சந்தேகத்திற்கிடமாக இருந்த பொருட்களை பறிமுதலும் செய்தனர்.
    • அதிகாலை நேரத்தில் நடந்த இந்த சோதனையால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் எண்ணற்ற கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த கல்வி நிறுவனங்கள் கோவை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இதில் சில மாணவர்கள் கல்லூரியில் உள்ள தங்கும் விடுதியிலும், இன்னும் சிலர் வெளியில் அறை எடுத்து தங்கியும் படித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கோவையில் படித்து வரும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது.

    இதனை தடுக்க, மாணவர்கள் மத்தியில் போதை பொருட்கள் புழங்குவதை தடுக்கவும், கல்லூரி மாணவர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் தடுக்கும் விதமாக, கோவை மாநகர் மற்றும் புறநகர் போலீசார் அவ்வப்போது, மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை கோவை சரவணம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சின்ன வேடம்பட்டி, சின்ன மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் அறை எடுத்து தங்கி இருக்கும் விடுதிகள், வீடுகள் உள்ளிட்ட பகுதிகளில் உதவி போலீஸ் கமிஷனர் வேல்முருகன் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அதிகாலை 6 மணிக்கு கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறைக்கு வந்த போலீசார் கதவை தட்டினர்.

    அவர்கள் கதவை திறந்ததும், உள்ளே சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். மாணவர்கள் வைத்திருந்த பேக்குகள், சூட்கேஸ்கள், அலமாரிகள், கட்டில்கள், குப்பைத்தொட்டிகள், என அனைத்திலும் சோதனை நடத்தினர்.

    அறையில் ஏதாவது தடை செய்யப்பட்ட போதை பொருள் மற்றும் கஞ்சா ஏதாவது மறைத்து வைத்துள்ளனரா? எனவும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    மேலும் அறையில் சந்தேகத்திற்கிடமாக இருந்த பொருட்களை பறிமுதலும் செய்தனர்.

    தொடர்ந்து மாணவர்களிடம், அவர்களின் பெயர், சொந்த ஊர், அவர்கள் படிக்கும் கல்லூரியின் பெயர், பாடப்பிரிவு மற்றும் மோட்டார் சைக்கிள்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்றும் விசாரித்தனர்.

    அதிகாலை நேரத்தில் நடந்த இந்த சோதனையால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×