search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவொற்றியூரில் மின்தடை: மின் ஊழியரின் அலட்சிய பதில் `ஆடியோ வைரல்
    X

    திருவொற்றியூரில் மின்தடை: மின் ஊழியரின் அலட்சிய பதில் `ஆடியோ' வைரல்

    • அலட்சிய பேச்சு `ஆடியோ’ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

    திருவொற்றியூர்:

    தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்கி வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கத்தாலும், இரவு நேரங்களில் புழுக்கத்தினாலும் மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இதனால் வீடுகளில் ஏ.சி. எந்திரத்தின் பயன்பாடு அதிகரித்து மின்தேவை உயர்ந்துள்ளது.

    இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நீடித்து வருகிறது. இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் மக்கள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திருவொற்றியூர் தேரடி வடக்கு மாட வீதி, காலடிப்பேட்டை எழுத்துகாரன் தெரு, ரெயில் நிலையம் சாலை பகுதியில் நேற்று இரவு 10 மணி முதல் மின்தடை ஏற்பட்டது.

    இதனால் நீண்ட நேரம் வரை மின் வினியோகம் சீராகாததால் குழந்தைகள், வயதானவர்கள் தூங்க முடியாமல் புழுக்கத்தால் கடும் சிரமம் அடைந்தனர். மேலும் விட்டு, விட்டு மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.

    இது குறித்து பொதுமக்கள் புகார் செய்வதற்காக மின்வாரிய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டபோது அது எடுக்கப்படவில்லை.

    மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ள அறிவிக்கப்பட்ட செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இது தொடர்பாக அதே பகுதி வடக்கு மாட வீதியைச் சேர்ந்த ஒருவர் மின் ஊழியர் ஒருவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.

    அப்போது அவர், இதற்கு நாங்கள் என்ன பண்ண முடியும். ஆட்கள் யாரும் இல்லை என்று அலட்சியமாக பதில் கூறினார். மின் ஊழியரின் இந்த அலட்சிய பேச்சு `ஆடியோ' தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இதற்கிடையே இரவு 12 மணிக்கு மேல் திருவொற்றியூர் பகுதியில் மின்சாரம் வினியோகம் சரியானது. இரவு நேரங்களில் மின்தடை ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×