search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெகதாப்பட்டினத்தில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
    X

    நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

    ஜெகதாப்பட்டினத்தில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    • தமிழகத்திற்கு நல்ல அமைச்சர்களை புதுக்கோட்டை மாவட்டம் கொடுத்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
    • திருமயம் வட்ட மருத்துவமனை 10 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்படும் என முதல்வர் அறிவிப்பு

    புதுக்கோட்டை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    எந்தக் கோட்டையாக இருந்தாலும் அது ஒரு நாள் பழைய கோட்டையாக ஆகிவிடும். ஆனால் எப்போதும் புதிய- கோட்டையாகவே இருப்பது, இந்த புதுக்கோட்டை! தமிழகத்திற்கு நல்ல அமைச்சர்களைக் கொடுத்த இந்த புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நான் நன்றி.

    இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள, அடிக்கல் நாட்டப்பட்டுள்ள திட்டப் பணிகள் மட்டுமல்லாமல், இந்த மாவட்டத்தினுடைய மக்கள் மேலும் பயனடையும் வகையில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    திருமயம் பகுதி மக்கள் பயன்பெறக்கூடிய வகையில், 10 கோடி ரூபாய் செலவில், கூடுதல் படுக்கைகள், நவீன அறுவை சிகிச்சை அரங்கம் போன்ற வசதிகளோடு, திருமயம் வட்ட மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்.

    இந்த மாவட்டத்தில் முக்கிய மீன்பிடிப்பு மையங்களாக இருந்து வரும் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் வாழக்கூடிய மீனவ மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், கோட்டைப்பட்டினம் மீன் இறங்குதளம் 15 கோடி ரூபாய் செலவிலும், ஜெகதாபட்டினம் மீன் இறங்குதளம் 15 கோடி ரூபாய் செலவிலும் மேம்படுத்தப்படும். மேலும் ஜெகதாப்பட்டினத்தில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளப்படும்.

    மொத்தமாகச் சொல்வதாக இருந்தால், மாநிலம் முழுமைக்கும் என்ன தேவை, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என்ன தேவை, ஒவ்வொரு தனிமனிதனின் தேவையும் என்ன என்பதை பார்த்துப் பார்த்துச் செய்யக்கூடிய அரசாக நம்முடைய தமிழ்நாடு அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×