search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழில் நிறுவனங்களில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்- கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு
    X

    தொழில் நிறுவனங்களில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்- கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு

    • 36 அமைப்பினர் ஆதரவு தெரிவித்து ஒருநாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.
    • வருகிற 16-ந் தேதி தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்.

    பல்லடம்:

    தொழில் நிறுவனங்களுக்கான 430 சதவீதம் உயர்த்திய மின்சாரநிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். பீக்ஹவர் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். 3பி-யில் இருந்து 3 ஏ1 நடைமுறைக்கு மாற்றி சிறு, குறு தொழில் நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    கடந்த மாதம் 25-ந்தேதி உற்பத்தி நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில் திருப்பூர் பனியன் தொழில் சார்ந்த தொழில் அமைப்பினர் மற்றும் சிறு, குறு தொழில் அமைப்பினர் என 36 அமைப்பினர் ஆதரவு தெரிவித்து ஒருநாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.

    இந்நிலையில் இன்று தொழில்துறையின் நிலை குறித்து அரசிடம் தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தொழில் துறையினர் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

    இதில் பங்கேற்ற தொழில் துறையினர் பலர் கருப்பு பேட்ஜ் மற்றும் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். மேலும் தொழில் பாதிப்பை அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் அவரவர் நிறுவனங்களில் கருப்புக்கொடி ஏற்றினர். ஒவ்வொரு தொழில் சங்கத்தில் இருந்து குறைந்தபட்சம் 50 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    ஒவ்வொரு அமைப்பினரும் மின்கட்டண பாதிப்பு குறித்து மனுவில் கையெழுத்திட்டு கலெக்டரிடம் வழங்கினர். முன்னதாக அனைத்து அமைப்பினரும் ஒன்று சேர்ந்து திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தின் முன் திரண்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மேலும் மனுக்களை முதல்-அமைச்சருக்கு அனுப்ப இருப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் கோபி பழனியப்பன் கூறும்போது, மின்கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி இன்று தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக தொழில்துறையினர் கருப்பு பேட்ஜ் அணிந்து அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மனு நீதிநாள் முகாமில் கலெக்டரை சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக வருகிற 16-ந் தேதி தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். இதில் திரளானவர்கள் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

    போராட்டத்தையொட்டி திருப்பூர், பல்லடம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளின் முன்பு கருப்புக் கொடி ஏற்றப்பட்டது.

    Next Story
    ×