search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிரந்தர தீர்வு கேட்டு தீவிரமடையும் போராட்டம்: மீனவர்கள் தீக்குளிப்பு அறிவிப்பால் ராமேசுவரம் பகுதியில் பதட்டம்
    X

    நிரந்தர தீர்வு கேட்டு தீவிரமடையும் போராட்டம்: மீனவர்கள் தீக்குளிப்பு அறிவிப்பால் ராமேசுவரம் பகுதியில் பதட்டம்

    • மீனவர்களை விடுதலை செய்யவதில் மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது.
    • அபராதத்தை செலுத்த முடியாமல் சிறையில் தவித்து வருகிறார்கள்.

    ராமேசுவரம்:

    எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும், அவர்களின் விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் கடந்த மாதம் 24-ந்தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.

    மீனவர்கள் பிரச்சனையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கடந்த 28-ந்தேதி முதல் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.


    அதன்படி உண்ணாவிரதம், காத்திருப்பு போராட்டம், கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் நடத்திய மீனவர்கள் 4-வது நாளான நேற்று திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தினர்.

    இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு சிறையில் வாடும் மீனவர்களை விடுதலை செய்யவதில் மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது.

    மேலும் மீனவர்களுக்கு லட்சக்கணக்கில் விதித்த அபராதத்தை செலுத்த முடியாமல் சிறையில் தவித்து வருகிறார்கள். அந்த அபராத தொகையை செலுத்த நாங்கள் பிச்சை எடுக்கிறோம் என்றனர்.

    அத்துடன் இந்திய நாட்டிற்கு பல ஆயிரம் கோடியை அந்நியச் செலாவணியாக ஈட்டித்தரும் மீனவர்கள் இன்று பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.

    இதற்கிடையே நேற்று இரவு போராட்ட பந்தலுக்கு வருகை தந்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், டெல்லியில் தி.மு.க. எம்.பி.க்கள் பிரச்சனையை முன்னிறுத்தி தீர்வுகாண உத்தரவிட்டு இருப்பதாகவும், இன்னும் 10 நாட்களுக்குள் மீனவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.

    இருந்தபோதிலும் முதலமைச்சர், பிரச்சனைக்கு தீர்வு காண்பேன் என்று உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர். அதன்படி இன்று 5-வது நாளாக மீனவர்கள் போராட்டம் தொடர்கிறது.


    இந்தநிலையில் இன்று தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். இதனால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் தயார் நிலையில் தீயணைப்பு வாகனம் கொண்டு வரப்பட்டு பேராட்ட பந்தல் அருகே நிறுத்தப்பட்டுள்ளது.

    நாளுக்கு நாள் தீவிர மடையும் போராட்டத்தால் ராமேசுவரத்தில் 700 விசைப்படகுகளும், மண்டபம் கோவில்வாடி பகுதியில் 150 படகுகளும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் தற்போது வரை ரூ.30 கோடிக்கும் மேல் மீன்பிடி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    அத்துடன் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழில் சார்ந்தவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள்.

    முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விசைப்படகு உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், இலங்கை சிறையில் உள்ள மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவித்தொகை ரூ.350-ல் இருந்து ரூ.500-ஆக உயர்த்தி வழங்கவும் உத்தரவிட்டு உள்ளார்.

    Next Story
    ×