search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பத்திரப்பதிவு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
    X

    மாவட்ட பத்திரவுப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

    பத்திரப்பதிவு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

    • தருமபுரி எஸ்.வி. சாலையில் உள்ள மாவட்ட பத்திரவு பதிவு அலுவலகம் முன்பு திடீரென்று திரண்டு வந்தனர்.
    • அனைவரும் அலுவலகத்திற்குள் புகுந்து தங்களுக்கு பட்டா உடனடியாக வழங்க வேண்டும் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் அன்னசாகரம் பகுதியில் விநாயக சிவசுப்ரமணியம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை சுற்றி சுமார் 350 குடும்பத்தினர் வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர்.

    நீண்ட காலமாக அந்த பகுதியில் வாழ்ந்து வந்த அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் விநாயக சிவசுப்ரமணியம் கோவிலை சுற்றியுள்ள நிலங்கள் அறநிலையத்திற்கு சொந்தமானது என்றும்,

    எனவே இந்த நிலங்களை அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.இந்த நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தும் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

    அந்த மனுமீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும், காலம் காலமாக நாங்கள் இந்த பகுதியில் வசித்து வருகிறோம், எனவே எங்களுக்கு உரிய பட்டா வழங்க வேண்டும் என்றும் கலெக்டரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்களும் எதிர் மனு கொடுத்தனர்.

    இருதரப்பினரின் மனுக்களையும் பரிசீலித்து 350 குடும்பத்தினருக்கு பட்டா வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

    இதுதொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பட்டா கேட்டு வந்தனர்.

    ஆனால், அதிகாரிகள் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தியும், அப்பகுதி பொதுமக்களை அலைகழித்தும் வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் இன்று தருமபுரி எஸ்.வி. சாலையில் உள்ள மாவட்ட பத்திரவு பதிவு அலுவலகம் முன்பு திடீரென்று திரண்டு வந்தனர்.

    அப்போது அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். அப்போது அவர்கள் அனைவரும் அலுவலகத்திற்குள் புகுந்து தங்களுக்கு பட்டா உடனடியாக வழங்க வேண்டும் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த தருமபுரி டவுன் போலீசார் உடனே அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் அசம்பாவிதங்கள் வேறு ஏதும் நடைபெறாமல் இருக்க 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×