என் மலர்
உள்ளூர் செய்திகள்

பல்லடத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
- நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- பணி நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு தாருங்கள் என கூறியதை யடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
பல்லடம் :
பல்லடம் நகராட்சி 8-வது வார்டு பச்சாபாளையம் மயான பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.145 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பல்லடம் நகராட்சி தரப்பில் முயற்சி மேற்கொண்டு வருகிறது. நவீன எரிவாயு தகன மேடை அமைக்க அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டவர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பியும், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நவீன எரிவாயு திட்டத்திற்கு தடை விதிக்க கோரி பொதுமக்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே நவீன எரிவாயு தகனமேடை அமைக்க பூமி பூஜை போடுவதற்காக அந்த இடத்தை சுத்தம் செய்ய நகராட்சி ஆணையாளர் விநாயகம் ,பொறியாளர் ஜான் பிரபு உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் நகராட்சி பணியாளர்கள சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த பச்சாபாளையம் பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது எப்படி சுத்தம் செய்யலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பல்லடம் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- அரசு எந்த திட்டத்தை கொண்டுவந்தாலும் தொலைநோக்குப் பார்வையில் திட்டங்களை கொண்டு வர வேண்டும். இந்தத் திட்டம் அமைந்தால் தினமும் சுமார் 4 முதல் 10 உடல்கள் வரை எரியூட்ட அந்த பகுதிக்கு வரும்.
ஏற்கனவே கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. அந்த ரோடு வழியாகத்தான் உடலைக் கொண்டு வரும் வாகனங்கள் சென்று வர வேண்டும். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் திட்டம் செயல்படுத்த உள்ள பகுதியில் சுகாதார வளாகம், ரேசன் கடை, பனியன் கம்பெனி, 1000க்கும்மேற்பட்ட மாணவர்கள் பயிலும் பள்ளி ஆகியவை உள்ளன.
மேலும் பெண்கள் அதிகமாக நடமாடும் பகுதி.இந்த நிலையில், அங்கு இந்த திட்டத்தை செயல்படுத்தினால் பெண்களுக்கு கடும் அவதி ஏற்படும். எனவே தொலைநோக்குப் பார்வையில், போக்குவரத்து பிரச்சனை இல்லாத நகருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில், இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மை ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் போலீசார் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று இருந்தால் அதனை தாருங்கள் இல்லாவிட்டால், பணி நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு தாருங்கள் என கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.






