search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு
    X

    ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

    • ஜூலை 8- முதல் 31-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
    • மாவட்டம் விட்டு மாவட்டம் என பிரிக்கப்பட்டு நடத்தப்பட இருக்கிறது.

    சென்னை:

    ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த மாதம் (ஜூலை) 8-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி, பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) என்ற இணையதளத்தில் கடந்த மாதம் (மே) 13-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர்.

    அந்தவகையில் தொடக்கக் கல்வித் துறை இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு என 35 ஆயிரத்து 667 ஆசிரியர்களும், பள்ளி கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுநிலை ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு என 46 ஆயிரத்து 810 ஆசிரியர்களும் என மொத்தம் 82 ஆயிரத்து 477 ஆசிரியர்கள் விண்ணப்பப் பதிவு செய்திருந்தனர்.

    இவர்களுக்கான கலந்தாய்வு அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், சில காரணங்களுக்காக அது மாற்றப்பட்டது. அதன்படி, பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் வரும் ஆசிரியர்களுக்கான புதிய கலந்தாய்வு அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

    அதில் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் கோரி விண்ணப்பித்த விண்ணப்பங்களின் முன்னுரிமை பட்டியல் அடுத்த மாதம் (ஜூலை) 3-ம் தேதி வெளியாகிறது. அதன்பின் அதில் திருத்தம், முறையீடுகள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டபின், 6-ம் தேதி இறுதி முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் 8-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை பொது மாறுதல் கலந்தாய்வு வருவாய் மாவட்டத்துக்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் என பிரிக்கப்பட்டு நடத்தப்பட இருக்கிறது.

    Next Story
    ×