என் மலர்
உள்ளூர் செய்திகள்

வட்டார வளர்ச்சி அலுவலர் காரை மறித்து கிராம மக்கள் போராட்டம்
- வட்டார வளர்ச்சி அலுவலர் காரை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- அடிப்படை வசதிகள் செய்து தர உடனடி நடவடிக்கை கோரி
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆர். பாலக்குறிச்சி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த பொதுமக்கள், கடந்த 17 ஆண்டுகளாக எங்கள் பகுதிக்கு சாலை வசதி செய்து தரப்படவில்லை. பேருந்து வசதிகள் இல்லை. இப்பகுதியில் மருத்துவமனை இல்லாத காரணத்தால் சிவகங்கை மாவட்டத்திற்கு மருத்துவம் பார்க்க செல்ல வேண்டிய சூழல் இருப்பதாகவும், கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறி பொதுமக்கள் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏந்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்து அங்கு வந்த பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி காரில் புறப்படும் போது, அவரின் காரை மறித்து தங்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உலகம்பட்டி காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உங்களது கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.






