என் மலர்
உள்ளூர் செய்திகள்
புதுக்கோட்டையில் சுகாதார தத்தெடுப்பு களப்பயணம்
- புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியின் முதலாமாண்டு பயிலும் மாணவர்கள் சுகாதார தத்தெடுப்பு களப்பயணம் மேற்கொண்டனர்
- 365 குடும்பத்தினருக்கு 5 ஆண்டுகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்க முடிவு
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியின் முதலாமாண்டு பயிலும் 73 மருத்துவ மாணவ-மாணவிகள் சமூக மருத்துவம் மற்றும் நோய் தடுப்புத்துறை டாக்டர் சரவணன் தலைமையில் சுகாதார தத்தெடுப்புக்காக அண்டகுளம் அருகே உள்ள கடியாம்பட்டி கிராமத்திற்கு களப்பயணம் மேற்கொண்டனர். அங்கு சென்ற மாணவர்கள் சுகாதாரம் சார்ந்த தகவல்களை சேகரித்து ஒவ்வொரு மாணவரும் சுகாதார தத்தெடுப்புக்காக தலா 5 குடும்பங்கள் வீதம் தத்தெடுத்து குடும்பத்தில் உள்ளவர்களின் தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்டனர். தத்தெடுத்த 365 குடும்பத்தார்களிடமும் தங்களது தொலைபேசி எண்ணை கொடுத்து 5 ஆண்டுகள் எம்.பி.பி.எஸ். படித்து முடிக்கும் வரை ஒவ்வொரு மாணவரும் அந்த 5 குடும்பத்திற்கு தேவையான மருத்துவ ஆலோசனை தேவைப்படும் நேரங்களில் வழங்கி கண்காணித்து வரவேண்டும். அந்த 5 குடும்பத்தை சேர்ந்தவர்களும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கும், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான ஆலோசனைகளையும் அந்த மாணவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருந்துகள் எடுத்துக்கொள்வது பற்றியும், அவசரகால நேரங்களிலும் முதலுதவி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடியாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு உடல் நலன் குறித்து டாக்டர் சரவணன் எடுத்து கூறினார்.