search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லண்டன் செல்லும் புதுக்கோட்டை  சிற்பங்கள்
    X

    லண்டன் செல்லும் புதுக்கோட்டை சிற்பங்கள்

    • புதுக்கோட்டையிலிருந்து லண்டனுக்கு கல் சிற்பங்கள் கொண்டு செல்லப்படுகிறது
    • சிற்ப கலைஞரிடம் ஒப்படைத்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளில் கிடைக்கும் பாறைகள் கற்சிலைகள் செய்ய ஏதுவாக இருப்பதால், இங்கு அதிகமான இடங்களில் சுவாமி, அம்மன் சிலைகள், கல் சிற்பங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து பல்வேறு மாட்டங்கள், மாநிலங்களுக்கு மட்டுமின்றி வெளி நாடுகளுக்கும் சிற்பங்கள் கொண்டு செல்லப்படுவதால், இம்மாவட்டம் சிலை வடிப்பில் முன்னோடியாக விளங்குகிறது.

    இந்நிலையில் லண்டனின் தெற்கு பகுதியில் உள்ள பழமையான பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, இக்கோவிலில் அம்மனுக்கு ெசலுத்தப்பட்ட காணிக்கை, பக்தர்களின் நன்கொடை மூலம் கோவிலின் அனைத்து பகுதிகளையும் 7 அடி உயரத்துக்கு கல்லால் அமைக்க திட்டமிட்ட அந்த கோவிலின் நிர்வாகிகள், இக்கோவிலுக்கான கல் சிற்பங்கள் செய்யும் பணியை புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தை சேர்ந்த சிற்ப கலைஞரிடம் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து, கடந்த 5 ஆண்டுகளாக அறந்தாங்கி அருகே உள்ள ராஜேந்திரபுரம் பகுதியில் லண்டன் பத்ரகாளி அம்மன் கோவில் கட்டுமானத்து தேவையான சிற்பங்கள் செய்ய கற்கள் கொண்டுவரப்பட்டு, கல்சிற்பங்கள் செதுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

    தற்போது ஆழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கல்சிற்பங்கள் செதுக்கும் அனைத்து பணிகளும் முடிவடைந்ததை தொடர்ந்து, அனைத்து சிற்பங்களும் தனித்தனியாக 51 மரப்பெட்டிகளுக்குள் வைத்து அடைக்கப்பட்டன. அந்த பெட்டிகள் கிரேன் மூலம் லாரிகளில் ஏற்றப்பட்டு, சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன. இவை அங்கிருந்து கப்பல் மூலம் லண்டனுக்கு கொண்டு செல்லப்படடவுடன், கோவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    Next Story
    ×