search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராகி கொள்முதல்:  விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள கலெக்டர் வேண்டுகோள்
    X

    தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக் கிழமைகளில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்திற்கான கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்த போது எடுத்த படம்.

    ராகி கொள்முதல்: விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள கலெக்டர் வேண்டுகோள்

    • இந்த மாதத்திற்கான கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
    • கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கியுள்ளது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசிகளை போட வேண்டும் என வலியுறுத்தினர்.

    தருமபுரி,

    தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக் கிழமைகளில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்திற்கான கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் விவசாயிகள் கடந்த மாதம் கொடுக்கப்பட்ட மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வேளாண், வேளாண் பொறியியல், தோட்டக்கலை, பட்டு வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற மானியங்கள், திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விளக்க உரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சாந்தி விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

    அப்பொழுது பெரும்பாலான விவசாயிகள் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கியுள்ளது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசிகளை போட வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் 100 மாடுகள் இருந்தால் மட்டுமே தடுப்பூசி போட முடியும் என்பதால், சுற்று வட்டார பகுதியில் உள்ள மாடுகளை ஓரிடத்தில் சேர்த்து முகாம்களை நடத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் ராகி கொள்முதல் நிலையத்தில் ராகி விற்பனை செய்வதற்கு வருவாய்த் துறையினர் சான்றிதழ் வழங்க கால தாமதம் செய்வதாகவும், நாள் கணக்கில் அலைக் கழிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பேசிய கலெக்டர் தருமபுரி மாவட்டத்தில் ராகி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கொள்முதல் நிலையத்தில் தருமபுரி நகர் பகுதிக்கு வினியோகம் செய்கின்ற அளவிற்கு கூட ராகியை விவசாயிகள் கொடுப்பதில்லை. எனவே தருமபுரி மாவட்டத்தில் உள்ள ராகி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளைவித்த ராகியை விற்பனைக்காக கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் விவசாயிகளுக்கு ராகி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்கு உரிய சான்றிதழை வருவாய்த் துறையினர் உடனடியாக வழங்க வேண்டும்.

    இதில் சிட்டா, அடங்கல் வழங்கும்பொழுது ராகி பயிர் ஒரு வருடத்திற்குள்ளாக சாகுபாடி செய்யப்பட்டிருந்தால் கூட, அந்த ராகி பயிர்களுக்கு சிட்டா, அடங்கல்களை வருவாய்த் துறையினர் தடையில்லாமல் வழங்க வேண்டும். மேலும் ராகி வைத்துள்ளவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள வேளாண்துறை அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். இந்த ராகி கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி விவசாயிகள் போதிய வருவாய் ஈட்டி கொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.

    Next Story
    ×