என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழை- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
    X

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழை- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    • கிருஷ்ணகிரி நகரத்தில் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது.
    • சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது.

    தருமபுரி:

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால், 23 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதன் காரணமாக இன்று (12-ந்தேதி) முதல் வருகிற 17-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    தர்மபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கவுண்டம்பட்டி, அ.பள்ளிப்பட்டி மெனசி சிந்தல்பாடி, வெங்கடச முத்திரம், மோளையானூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, செலம்பை ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை முதல் இருந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

    இதனால் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் அன்றாட பணிகளுக்கு செல்லும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கிருஷ்ணகிரி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இன்று காலை முதல் சாரல் மழை பெய்தது. இந்தமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

    இந்த மழையால் கிருஷ்ணகிரி நகரத்தில் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது. சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது.

    ஊத்தங்கரையில் கடந்த 2-ந் தேதி பெய்த கனமழையால் பல குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தும், டூரிஸ்ட் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டதும், மழை நீரால் ஏற்பட்ட சோகத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் மக்கள் தவித்து வரும் சூழ்நிலையில் பலரது வீடுகள் இல்லாமல் உள்ளனர்.

    இந்நிலையில் ஊத்தங்கரை, அனுமன் தீர்த்தம், காரப்பட்டு, சிங்காரப்பேட்டை, மத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது.

    இதனால் அப்பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருவதோடு, வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    கடந்த 2-ந் தேதி மழையால் ஏற்பட்ட தாக்கத்தை போல் இன்றும் நடந்து விடுமோ என்று இப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

    இது மட்டுமின்றி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தற்பொழுது வரையிலும் விடுமுறை அளிக்காததால் பள்ளி மாணவர்களும் பாதிப்பு உள்ளாகி மழையில் நனைந்தபடி பள்ளிக்கு செல்லும் அவல நிலை நிலவி வருகிறது.

    Next Story
    ×