என் மலர்
உள்ளூர் செய்திகள்
சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மீண்டும் பரவலாக மழை
- ஆத்தூர் அருகே உள்ள கரியகோவில், கருமந்துறை உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது.
- வாழப்பாடி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி, வீரபாண்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
சேலம்:
வங்கக்கடலில் மீண்டும் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் நேற்று காலை முதலே மேகமூட்டமாக காட்சி அளித்தது. பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவில் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் ஏற்காட்டில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. மழையை தொடர்ந்து ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது.
ஏற்காட்டில் பெய்யும் மழையால் ஏற்காடு மலைப்பாதையில் மீண்டும் மண் சரிவு ஏற்படுமோ? என்ற அச்சம் அங்கு வசிக்கும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஏற்காட்டில் நேற்றிரவு முதல் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளதால் அந்த கிராம மக்கள் கடும் அவதி அடைந்தனர். ஏற்காடு செங்காடு கிராமத்தில் மின்கம்பத்தில் செல்லும் மின் கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தன. இதனால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆத்தூர் அருகே உள்ள கரியகோவில், கருமந்துறை உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே கரியகோவில் அணை நிரம்பிய நிலையில் தற்போது இந்த மழையால் 2-வது முறையாக அணை நிரம்பி உள்ளது. இதனால் அணையில் இருந்து 190 கன அடி உபரி நீர் வசிஷ்ட நதியில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் மழை அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளதால் வசிஷ்ட நதியின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தொடங்கிய மழை தொடர்ந்து சாரல் மழையாக நீடிக்கிறது . இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதே போல வாழப்பாடி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி, வீரபாண்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. மழையால் கல்லூரிகள் அலுவலகங்களுக்கு சென்றவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டார். வழக்கமாக சில தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் காலை 6.30 மணி முதல் வீட்டில் இருந்து புறப்பட்டு செல்வார்கள். தாமதமாக விடுமுறை அறிவித்ததால் இதுபற்றி தெரியாமல் பள்ளிக்கு சென்ற பெரும்பாலான மாணவ-மாணவிகள் மீண்டும் மழையில் நனைந்தபடியே வீடுகளுக்கு திரும்பினர். சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் இதே நிலை காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் இதே போல கல்லூரிகள் மற்றும் அலுவலக வேலைகளுக்கு சென்றவர்கள் குடை பிடித்த பிடியும், ஸ்வெட்டர்கள் அணிந்த படியும் சென்றதை காண முடிந்தது.
நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம், குமாரபாளையம், நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் பள்ளி மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.