என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரம்ஜான் பண்டிகை: எடப்பாடி பழனிசாமி- தலைவர்கள் வாழ்த்து
- ரமலான் என்பது இஸ்லாமியர்களுக்கு மிகவும் புனிதமான காலமாகும்.
- இறை நம்பிக்கையுடன் நபிகள் நாயகத்தின் தியாகம், நன்மை, ஒழுக்கநெறி உள்ளிட்ட நற்செயல்களை அனைவரும் கடைபிடித்து நல்வழியில் பயணிப்போம்
சென்னை:
ரம்ஜான் பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-
ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை இன்பமுடன் கொண்டாடும் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
தூய்மையும், பக்தியும் உள்ளதாய், பாவங்களற்றதாய், பொறாமை, அத்துமீறல் இல்லாத இதயமே பரிசுத்தமான இதயம் என்று நபிகள் நாயகம் உலகிற்கு பறைசாற்றி உள்ளதை அனைவரும் நினைவில் கொண்டு, தங்கள் கடமைகளைச் செவ்வனே மேற்கொண்டு வாழ வேண்டும் எனத் தெரிவித்து, இந்த இனிய திருநாளில், என் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், எனது உளமார்ந்த ரம்ஜான் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி:-
இந்த இனிய ஈகைத் திருநாளில் தக்பீர் முழக்கம் கூறி, தொழுது, அதற்கு முன்னர் ஏழைகளுக்கு 'சதக்கத்துல் பித்ர்' என்னும் பெருநாள் கொடை வழங்கி, அனைவருடனும் உணவருந்தி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:-
இறைத்தூதர் நபிகள் நாயகம் அருளிய போதனைகளை மனதில் நிலைநிறுத்தி; உடலையும், உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி; தூய்மை உணர்வோடு புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, இறைவனை வழிபட்டு, ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை எளியோருக்கு அளித்து, அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியப் பெருமக்கள் கொண்டாடி மகிழ்வார்கள்.
இந்த இனிய திருநாளில் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ரம்ஜான் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ந்து கொண்டாடி மகிழ்ந்திடும் இந்த நன்னாளில் மனித சமுதாயத்தில் அன்பு, வாய்மை, வாஞ்சை, நேர்மை, பொறுமை, திறமை, ஒற்றுமை, மனிதநேயம், சகோதரத்துவம் பெரிதும் வளர்ந்தோங்கிட இனிய ரமலான் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-
இஸ்லாம் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் போதிக்கிறது.
இறை நம்பிக்கையுடன் நபிகள் நாயகத்தின் தியாகம், நன்மை, ஒழுக்கநெறி உள்ளிட்ட நற்செயல்களை அனைவரும் கடைபிடித்து நல்வழியில் பயணிப்போம். இஸ்லாமிய சகோதர-சகோதரிகளுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
உலககெங்கும் வாழும் மக்களிடம் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருகவும், அமைதி, வளம், முன்னேற்றம், ஒற்றுமை, மகிழ்ச்சி ஆகியவை தழைக்கவும் உழைக்க இந்த புனிதமான நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:-
நன்மைக்கான போதனைகளை யார் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் தேவையில்லை. இதை உணர்ந்து உலகில் அமைதி, வளம், மகிழ்ச்சி, கல்வி, வளர்ச்சி நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகுவதற்காக பாடுபடுவதற்கு இந்த நன்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம்.
கடந்த ஒரு திங்களாக பசி, தாகத்தை அடக்கி உண்ணா நோன்பிருந்த இஸ்லாமிய பெருமக்கள் இன்று 'ஈதுல் பித்ர்" என்னும் ஈகைத் திருநாளை பெருமகிழ்வுடன் கொண்டாடி திளைக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
டி.டி.வி.தினகரன்
சமாதானம், சகோதரத்துவம் சிறக்கட்டும், சமூக நல்லிணக்கம் என்றும் நம்மிடம் தழைக்கட்டும் என இறைவனை வேண்டி, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி கொள்கின்றேன்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-
இஸ்லாமிய நாட்காட்டியின் 9 வது மாதமான புனித ரமலான் மாதத்தில், இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளுள் ஒன்றான ரமலான் நோன்பினை மெய்வருத்தி கடைபிடித்து, "இல்லாரும், இருப்போரும் ஒன்றே" என்ற தத்துவத்தை வெளிப்படுத்தும், இஸ்லாமிய சொந்தங்களுக்கு ரமலான் திருநாள் நல்வாழ்த்துகள்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-
உலகமெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒற்றுமையுடனும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தும், உதவி செய்யும் மனப்பான்மையுடனும் இஸ்லாமியர்களின் கடமைகள் 5-ஐயும் தவறாமல் கடைப்பிடித்து வாழ்ந்து உலக மக்கள் அனைவரிடத்திலும் சமத்துவம் மற்றும் சகோதரத்துடனும் பாசத்துடனும் இயன்றதை செய்வோம் இல்லாதோருக்கு என்று லட்சியத்தோடு வாழ்ந்திட இந்த புனிதமான ரமலான் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்திட வாழ்த்துகிறேன்.
சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-
ரமலான் என்பது இஸ்லாமியர்களுக்கு மிகவும் புனிதமான காலமாகும். எவ்வித ஜாதி, மத, பேதமில்லாமல் அனைவருக்கும் இந்த ரமலான் பண்டிகையில் உதவி செய்து வரும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பு ஓங்குக, அறம் தழைத்திடுக! சமாதானம் நிலவிடுக, சகோதரத்துவம் வளர்ந்திடுக! என்று கூறி என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர-சகோதரிகள் அனைவருக்கும் என் உளங்கனிந்த ரம்ஜான் பெருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் யாதவ்:-
நபிகள் நாயகத்தின் போதனைகள், கோட்பாடுகளை ஜாதி மதங்களை கடந்து நாம் அனைவரும் என்றென்றும் கடைபிடிக்க ரமலான் திருநாளில் உறுதியோம். சமய நல்லிணக்கத்தை கட்டிக்காக்க அனைவரும் உறுதி கொள்வோம். அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள்.
மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது:-
சகிப்புத்தன்மை, சகோதரத்துவம், சமய நல்லிணக்கம் மலர்ந்து, மக்கள் அனைவரும் பொருளாதார தன்னிறைவு அடைந்து, நாட்டில் என்றும் அமைதி நிலவ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம். அனைவருக்கும் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள்.
இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரர்கள் சங்க அகில இந்திய தலைவர் டாக்டர் வி.என்.கண்ணன்:-
சகோதரத்துவத்துடன் 1 மாதம் நோன்பிருந்து ரம்ஜான் கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு எங்கள் சங்கத்தின் சார்பில் இனிய ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்