என் மலர்
உள்ளூர் செய்திகள்

மே 1-ந் தேதி கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும்
- ராணிப்பேட்டை கலெக்டர் உத்தரவு
- கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், வருகிற மே 1-ந் தேதி கிராமசபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2023-ம் ஆண்டிற்கான கிராம சபைக்கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தன்று காலை 11 மணிக்கு கிராம சபைக்கூட்டம் தவறாமல் நடத்தப்பட வேண்டும்.
இந்த கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் (2023-2024), பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வறுமை குறைப்புத் திட்டம் மற்றும் இதர பொருட்கள் விவாதிக்கப்பட உள்ளது.
இந்த கிராம சபை கூட்டங்களில் தாசில்தார்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.






