search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகத்தான திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்
    X

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகத்தான திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்

    • அமைச்சர் ஆர்.காந்தி பேச்சு
    • ராணிப்பேட்டையில் புதிய திட்டபணிகள் தொடக்கம்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிய திட்ட பணிகள் கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது.

    வாலாஜா ஒன்றியம் வானாபாடி ஊராட்சியில் களத்துமேடு பகுதியில் ரூ.16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலையரங்கம், ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வானாபாடி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் மறுவாழ்விற்காக வழங்கப்படும் நிதியுதவி வழங்குதல்,

    கல்மேல்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட கல்புதூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்ப ள்ளியில் ரூ.19 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டிடம், ரூ.10.லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடம், கன்னிகாபுரத்தில் புதிய பகுதி நேர ரேசன் கடை, கல்மேல்குப்பத்தில் ரூ.19லட்சத்து50 ஆயிரம் மதிப்பில் புதியஆழ்துளை கிணறு, பைப்லைன்,

    தரைமட்டநீர்தேக்கத் தொட்டி , கல்மேல்குப்பம் ஊராட்சி மற்றும் அம்மூர் பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில், அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் தலா ரூ. 19 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்கள் என மொத்தம் ரூ.1 கோடியே 25 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் முடிவுற்ற 7 திட்டப்பணிகள் தொடக்க மற்றும் வகுப்பறை கட்டிடங்கள் திறக்கப்பட்டது.

    விழா நிகழ்ச்சிகளுக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்து பேசினார்.

    விழா நிகழ்ச்சிகளில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தும், பணிகளை தொடங்கி, நிதியுதவிகளை வழங்கினர்.

    அப்போது அவர் பேசியதாவது :-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆட்சி பொறுப்பேற்று 2 வருடங்களில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் மகத்தான திட்டங்களையும், தேர்தல் வாக்குறுதியில் கூறாத பல திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளார்.

    இந்த மக்களாட்சியில் கட்சி பாகுபாடின்றி மக்களின் அடிப்படை பிரச்சனைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகிறது. ஒரு நல்லாட்சி என்பது மக்களின் வரிப்பணத்தினை தேவையற்ற திட்டங்களுக்காக வீணடிக்காமல் அப்பணம் மக்களையே சேரும் வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதைத்தான் நமது முதல் அமைச்சர் செய்து வருகிறார்.

    நமது முதல் அமைச்சர் மகளிர்க்கும்,கல்விக்கும்,சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். அதனால் பொதுமக்கள் யார் மக்களுக்கான பயனுள்ள திட்டங்களை செயல்படுத்திகிறார்கள் என சிந்தித்து செயல்பட வேண்டும். மக்கள் ஒற்றுமையுடன் இருந்து அரசின் நலத்திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.

    நிகழ்ச்சிகளில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன்,எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன். அம்மூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா மகேஷ், ஒன்றியக் குழு துணை தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம்,ஒன்றியக் குழு உறுப்பினர்கள் செல்வி, ராமச்சந்திரன், வானாபாடி, கல்மேல்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஈஸ்வரி, ராஜரத்தினம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×