search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையநல்லூர் அருகே யானை மிதித்து தோட்ட காவலாளி பலி
    X

    கடையநல்லூர் அருகே யானை மிதித்து தோட்ட காவலாளி பலி

    • மூக்கையா இரவு காவல் பணியில் இருந்த போது தோட்டத்துக்குள் ஒற்றை யானை ஒன்று புகுந்தது.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி மலையடிவாரத்தில் ஊரில் இருந்து 500 மீட்டர் தொலைவில் பிள்ளையார் பாண்டி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

    அதில் தென்னை, மாமரம் உள்ளிட்ட மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த தோட்டத்தின் காவலாளியாக சொக்கம்பட்டி அருகே உள்ள வளையல்குடியிருப்பு பகுதியை சேர்ந்த மூக்கையா என்பவர் வேலை பார்த்து வருகிறார். அங்கு அவர் சுமார் 12 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.

    சமீப காலமாக தோப்பு அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இரவில் தொடர்ந்து யானை வந்து கொண்டி ருந்தது. இதனால் இரவிலும் தோட்டத்தை காவல் காக்க வேண்டும் என்பதற்காக தோட்டத்தின் உரிமையாளர் பிள்ளையார் பாண்டி நேற்று இரவு மூக்கையாவை அழைத்துக்கொண்டு தோப்பிற்கு சென்றார்.

    அங்கு மூக்கையா இரவு காவல் பணியில் இருந்த போது தோட்டத்துக்குள் ஒற்றை யானை ஒன்று புகுந்தது. உடனே அதனை அவர் விரட்டினார்.

    அப்போது யானை, மூக்கையாவை துரத்தியது. உடனே அவர் பதறியபடி ஓடியபோது தடுமாறி கீழே விழுந்தார். பின்னால் அவரை துரத்தி வந்த யானை மூக்கையாவை மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே மூக்கையா உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனை கண்ட பிள்ளையார் பாண்டி அங்கு இருந்து தப்பிச்சென்றார். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். பின்னர் மூக்கையாவின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மூக்கையாவின் மனைவி மற்றும் அவரது 3 மகள்களுடன் சேர்ந்து ஊர் மக்கள் அந்த பகுதியில் திரண்டனர். அவரது இறப்பிற்கு இழப்பீடு வழங்க கோரி மறியலுக்கு முயன்றனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் அங்கு சென்று மறியலுக்கு திரண்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    மேலும் வனத்துறை ரேஞ்சர் சுரேஷ், புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசு சார்பில் ரூ.10 லட்சம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக ரேஞ்சர் சுரேஷ் தெரிவித்தார். தொடர்ந்து அவர்களிடம் வனத்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×