search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மஞ்சளாறு நீர்தேக்க பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் -பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
    X

    மஞ்சளாறு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றிய காட்சி.

    மஞ்சளாறு நீர்தேக்க பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் -பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு

    • கெங்குவார்பட்டி அருகே மஞ்சளாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புது தடுப்பணையின் நீர்த்தேக்க பகுதிகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர்.
    • ஆக்கிரமித்து நடவு செய்யப்பட்ட 120 தென்னை மற்றும் 25 இலவமரங்கள் உள்ளிட்ட மரங்களை வேரோடு பிடுங்கி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையில் திறந்து விடப்படும் நீர் செல்லும் ஆற்றுப்பகுதியில் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு அதன் மூலம் 9 கண்மாய்களுக்கு நீர் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கெங்குவார்பட்டி அருகே மஞ்சளாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புது தடுப்பணையின் நீர்த்தேக்க பகுதிகளை ஆக்கிரமித்து சிலர் தென்னை மரம், இலவமரம் மற்றும் எலுமிச்சை மரங்கள் வைத்து விவசாயம் செய்து வந்தனர்.

    இதனால் கண்மாய்களுக்கு நீர் கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டதால் அப்பகுதி விவசாயிகள் ஆக்கிரமிப்புகள் அகற்றக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தனர்.

    இதன் அடிப்படையில் கடந்த மாதம் நீதிமன்றம் நீர் நிலை பகுதிகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்துள்ள பகுதிகளில் உள்ள மரங்களை அகற்றி நீர்நிலைப் பகுதிகளை மீட்டெடுக்க உத்தரவிட்டது. அதன் பேரில் பெரியகுளம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சவுந்தரம், மற்றும் உதவி பொறியாளர் கமலக்கண்ணன் தலைமையிலான பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து ஜே.சி.பி. மூலம் நீர் நிலை பகுதியில் ஆக்கிரமித்து நடவு செய்யப்பட்ட 120 தென்னை மற்றும் 25 இலவமரங்கள் உள்ளிட்ட மரங்களை வேரோடு பிடுங்கி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    முன்னதாக ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளை, ஆக்கிரமிப்பாளர்கள் தடுத்து நிறுத்தி ஜே.சி.பி. வாகனத்தின் முன் அமர்ந்து உள்ளே அனுமதிக்காமல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த அரசு அதிகாரிகளை அனுமதிக்கவில்லை என்றால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    அதனைத் தொடர்ந்து போலீசாரின் பாதுகாப்புடன் நீர்நிலை புறம்போக்குகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அனைத்து மரங்களையும் வேருடன் எடுத்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அதே போல் மஞ்சளாறு அணை நீர் தேக்கப் பகுதியில் அதிகாரிகளின் துணையோடு ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    Next Story
    ×