என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் கேரளா ஜவுளி வியாபாரியிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்
- தேர்தல் பறக்கும் படையினர் ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
- பணத்தை மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள தேர்தல் அலுவரிடம் ஒப்படைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் தேர்தல் பறக்கும் படையினர் ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் ரூ.1 லட்சம் பணம் இருப்பது தெரிய வந்தது. இது குறித்து காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை நடத்திய போது அவர் கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த ஜவுளி வியாபாரி முஸ்தபா என தெரிய வந்தது.
ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி வாங்க வந்திருப்பதாக கூறினார். எனினும் பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள தேர்தல் அலுவரிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் நேற்று ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட குமலன்குட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ. 1.22 லட்சம் இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த பா.ம.க கவுன்சிலர் பப்லு உள்பட 3 பேர் என தெரியவந்தது. அவர்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கள் வார்டில் உள்ள பொதுமக்களுக்கு வழங்குவதற்காக புத்தாடை வாங்க ஈரோடு வந்ததாக தெரிவித்தனர்.
எனினும் அவர்கள் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து மாநகராட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
ஏற்கனவே அரசு ஒப்பந்ததாரரிடம் ரூ.1 லட்சம் பணமும், லேத் பட்டறை உரிமையாளரிடம் ரூ.1.80 லட்சமும், பெண் ஒருவரிடம் ரூ.50 ஆயிரத்து 860 என மொத்தம் இதுவரை ரூ.5 லட்சத்து 52 ஆயிரத்து 860 பணம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.