என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் சீமான் தீவிர பிரசாரம் செய்ய முடிவு: கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
- இடைத்தேர்தல் வருகிற 5-ந் தேதி நடைபெறுகிறது.
- வருகிற 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க போன்ற முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளதால் தி.மு.க-நாம் தமிழர் கட்சிக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தல் வரும் 5-ந் தேதி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து வரும் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
கடந்த முறை போன்று இல்லாமல் இந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் எந்த ஒரு பரபரப்பும் இன்றி காணப்படுகிறது. தி.மு.க.வினர், நாம் தமிழர் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தி.மு.க.வினர் அமைச்சர் முத்துசாமி தலைமையில் உள்ளூர் கூட்டணி கட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி தனது ஆதரவாளருடன் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை முதல் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். சமீபத்தில் சீமான் பெரியார் குறித்து தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
இதையடுத்து தமிழகம் முழுவதும் அவர் மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு அமைப்புகள் புகார் அளித்தனர். அவரது வீட்டை முற்றுகையிட சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பெரியார் குறித்து சர்ச்சை கருத்து க்களை தெரிவித்து வரும் சீமான் பெரியார் பிறந்த ஈரோடு மண்ணில் பிரசாரம் செய்ய வரக்கூடாது என ஏற்கனவே பல்வேறு அமைப்புகள் தெரிவித்திருந்தன.
மேலும் அவர் மீது ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
அவரது பிரசாரத்தை தடுத்து நிறுத்துவோம் எனவும் அறிவித்திருந்தனர். இதனால் சீமான் பிரசாரம் செய்யும் இடங்களில் பிரச்சனை ஏற்படும் சூழல் உள்ளது.
இந்நிலையில் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் சீமான் அங்கிருந்து கார் மூலம் ஈரோடு வருகிறார். ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட குமலன்குட்டை பகுதியில் உள்ள ஓட்டலில் தங்குகிறார்.
அதைத்தொடர்ந்து இன்று மாலை 4 மணி அளவில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்கிறார்.
அதைத்தொடர்ந்து நாளை முதல் வருகிற 3-ந் தேதி வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். காலையில் தெருமுனை கூட்டம், பிரசாரம் மேற்கொள்கிறார். மாலை பொதுக்கூட்ட ங்களில் பேசுகிறார்.
சீமான் பிரசாரம் செய்யும் இடங்கள், பொதுக்கூட்டங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. சீமான் ஈரோடு வருகையையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் மேலும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.