search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முறைகேடாக ஓடிய வாகனம் பறிமுதல்: அண்ணாநகர், அயனாவரம் பகுதியில் ஆவின் பால் வினியோகம் தாமதம்
    X

    முறைகேடாக ஓடிய வாகனம் பறிமுதல்: அண்ணாநகர், அயனாவரம் பகுதியில் ஆவின் பால் வினியோகம் தாமதம்

    • முறைகேடாக, பாலை ஏற்றிச் செல்ல வந்த போது பிடிப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
    • முறைகேட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த பால் மொத்த வினியோகஸ்தரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

    சென்னை:

    சென்னையில் ஆவின் பால் 15 லட்சம் லிட்டர் தினமும் வினியோகம் செய்யப்படுகிறது. மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் இருந்து வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் முறைகேடாக பால் வாகனம் ஒன்று பாலை ஏற்றிச் செல்ல வந்தபோது அதனை ஆய்வு செய்த அதிகாரிகள் வேறு எண் கொண்ட வாகனத்தை கொண்டு வந்ததையொட்டி பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடந்தது.

    அந்த பால் வாகனம் மூலம் தினமும் அண்ணா நகர், அயனாவரம் உள்ளிட்ட சில பகுதிகளில் பால் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. முறைகேடாக, பாலை ஏற்றிச் செல்ல வந்த போது பிடிப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

    இதனால் அந்த பகுதியில் இன்று ஆவின் பால் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. காலை 6 மணிக்கு முன் பால் வினியோகிக்கப் பட வேண்டிய இடங்களில் வாகனம் வரவில்லை. பால் முகவர்கள், மளிகை, பெட்டிக் கடைக்காரர்கள் பால் கிடைக்காமல் அவதிப்பட்டனர். காலையில் பால் கிடைக்காமல் பொது மக்களும் சிரமப்பட்டனர்.

    பின்னர் தாமதமாக பால் வினியோகம் செய்யப்பட்டது. அதன்பிறகு முகவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு பால் பாக்கெட்டுகளை கொண்டு சென்றனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவன தலைவர் பொன்னுசாமி கூறியதாவது:-

    அம்பத்தூரில் ஒரே பதிவெண் கொண்ட இரண்டு வாகனங்களில் ஆவின் பால் பாக்கெட்டுகள் ஏற்றிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் முகப்பேர், அண்ணாநகர் உள்ளிட்ட சில பகுதிகளில் பால் வினியோகம் இன்று பாதிக்கப்பட்டது.

    இந்த முறைகேட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த பால் மொத்த வினியோகஸ்தரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×