என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்கோட்டையன் கட்சி விசுவாசத்தை யாருடனும் ஒப்பிட முடியாது- ஈஸ்வரன்

- மக்களின் கோரிக்கைகள் மதிக்கப்பட வில்லை என்பது வருத்தம்.
- கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்.
ஈரோடு:
ஈரோட்டில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் சமீபத்தில், 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் தெரு நாய்கள் கடித்து இறந்துள்ளன.
ஆடு மேய்ப்பவர்களின் வாழ்வாதாரத்தை அரசு சிந்திக்க வேண்டும். பூங்காவில் சிறுவர்களையும், தெருக்களில் பெண்களையும் நாய்கள் கடிப்பதை பார்க்க முடிகிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை செயல்படுத்த தவறினால், நாய்கள் அனைத்தையும் கடித்து பழகிவிடும்.
தெரு நாய் கடித்து ஆடு உள்ளிட்டவை இறந்தால், அடுத்த நாளே இழப்பீடு வழங்கவும், நாய்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும். இப்பிரச்சனையில் போதிய முயற்சி இல்லை. மக்களின் கோரிக்கைகள் மதிக்கப்பட வில்லை என்பது வருத்தம்.
ஈரோடு கிழக்கில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமாரை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்துள்ளனர். இது, இந்த ஆட்சியின் செயல்பாட்டுக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த வெற்றிக்கு பின் முதல்வர் இன்னும் வேகமாக செயல்படுவதை பார்க்க முடிகிறது.
அதேநேரம், ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி, போலியான வெற்றி என இ.பி.எஸ்., கூறுவதை ஏற்க முடியாது. கடந்த இடைத் தேர்தலில் பெற்ற ஓட்டை விட தி.மு.க., அதிக ஓட்டுகளை பெற்றுள்ளதை சிந்திக்க வேண்டும்.
கள்ளச் சாராய சாவு, அதற்கான கொலைகள், மயிலாடுதுறையில் 2 இளைஞர்கள் வெட்டிக் கொலை போன்றவை தொடர்ச்சியாக நடப்பவை, இதில் அரசு நடவடிக்கை எடுத்தாலும், சம்பவங்கள் தொடர்வதை பார்க்க முடிகிறது. இவற்றை தடுக்க நடவடிக்கை தேவை.
அ.தி.மு.க.,வில் செங்கோட்டையன் செயல்பாட்டை நான் பல ஆண்டுகளாக பார்க்கிறேன். அவர் 'திஷா' கூட்டத்தில் பங்கேற்றதில் எந்த தவறுமில்லை. ஒரு எம்.எல்.ஏ., என்ற முறையில் பங்கேற்பது சரிதான்.
அதேநேரம், அவரது கட்சி விசுவாசத்தை யாருடனும் ஒப்பிட முடியாது. இருந்தாலும், அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வில்லை என்பது போன்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருப்பது, உட்கட்சி பிரச்சனை.
இதை சரி செய்தால், அவர்கள் ஒன்றிணைவார்கள். 'சிஓட்டர்ஸ்' கருத்து கணிப்பில் தி.மு.க., 5 சதவீதமும், பா.ஜ.க, 3 சதவீதமும் கூடுதல் ஓட்டுக்களை பெற்றுள்ளதை, தனிப்பட்டதாக பார்க்கக்கூடாது. அது தி.மு.க.,வுக்கானது மட்டுமல்ல. அக்கூட்டணிக்கானது.
தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய்க்கு ஒய் பாதுகாப்பு ஏன் என்று யாருக்கும், புரியவில்லை. அவரிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை. மாநில அரசோடும் கலந்து பேசவில்லை, இதனால் பாதுகாப்புக்கான என்ன அரசியல் இருக்கிறது என்று தேர்தல் நெருங்க நெருங்க தான் காரணம் முழுமையாக தெரியவரும்.
இந்திய கூட்டணியில் பிளவு என்று சொல்வதற்கு எல்லாம் முதல்வர் தெளிவாக விளக்கம் சொல்லிவிட்டார். தோழமை கட்சிகள் போராட்டம் திட்டமிட்டு செய்வதில்லை, ஜனநாயாக ரீதியாக தான் செய்கிறார்கள் என்று முதல்வர் சொல்லி விட்டார்.
தாமதமாகி வரும் மக்கள் தொகை கணக்கெடுப்போடு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். கள் இயக்கம் நல்லசாமி, கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறார்.
இதன் மூலம் விவசாயிகள் அதிக பயன் பெறுவார்கள். பொருளாதார ரீதியாக மேம்படுவர். இதுபற்றி, 3 முறை சட்டசபையிலும், முதல்வரிடமும் பேசி, கள்ளுக்கான தடையை நீக்க கோரி உள்ளேன். கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என நானும் ஆதரிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.