என் மலர்
உள்ளூர் செய்திகள்
தேசிய நெடுஞ்சாலையில் எச்சரிக்கை விளக்கு இல்லாததால் தொடரும் விபத்துகள்
- தேவகோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் எச்சரிக்கை விளக்கு இல்லாததால் விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
- இந்த தேசிய நெடுஞ்சாலையின் உட்பிரிவு சாலையில் எச்சரிக்கை விளக்குகள் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
தேவகோட்டை
ராமநாதபுரம் மாவட்டம் கிளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது58). கட்டிட தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை புளியால் சந்திப்பில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தேவகோட்டை தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேத சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை தற்போது புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில் தேவகோட்டை அருகே உள்ள சடையன்காடு, தேவகோட்டை பிரிவு சாலை, உடப்பன் பட்டி, கன்னங்கோட்டை, மாரிச் சான்பட்டி, தளக்காவயல், மாவிடுத்திக்கோட்டை, புளியால் போன்ற இடங்களில் சாலையில் எச்சரிக்கை விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
ஒரே மாதத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் இந்த சாலையில் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். இந்த சாலையில் சுங்கவரி வசூல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த தேசிய நெடுஞ்சாலையின் உட்பிரிவு சாலையில் எச்சரிக்கை விளக்குகள் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.