search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழடி அகழ் வைப்பக கட்டுமான பணிகள் இந்த மாத இறுதியில் முடிவடையும்;  அமைச்சர் தகவல்
    X

    கீழடி அகழ் வைப்பக கட்டுமான பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு, முதன்மை செயலாளர் உதயசந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அருகில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி, தொல்லியல் துறை ஆணையர் சிவனாந்தம் உள்ளனர்.

    கீழடி அகழ் வைப்பக கட்டுமான பணிகள் இந்த மாத இறுதியில் முடிவடையும்; அமைச்சர் தகவல்

    • கீழடி அகழ் வைப்பக கட்டுமான பணிகள் இந்த மாத இறுதியில் முடிவடையும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
    • தமிழர்கள் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்ன தாகவே நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கீழடி அகழ் வைப்பக கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

    இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து அரசு முதன்மைச் செயலாளர்- சிறப்பு செயலாக்க திட்டம், டி.உதயசந்திரன்,கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

    வரலாற்று சிறப்பு மிக்க சிவகங்கை மாவட்டத்தில் சங்ககால தமிழர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை உலகத்தமிழர்கள் பார்த்து, அறிந்து கொள்ளும் வகையில், அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக அவர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்தாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அகழாய்வுப் பணியில் கிடைக்கும் தொல்பொருட்களை பார்த்த வகையில் தமிழர்கள் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்ன தாகவே நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது.

    அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாகவும், அந்த பொருட்களை பொதுமக்கள் பார்த்து அறிந்து கொள்ளும் வகையிலும், கீழடியில் செட்டுநாடு கலைநயத்துடன் கூடிய ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் புதிய அகழ் வைப்பக கட்டிடத்தின் கட்டுமானப்பணிகள் மட்டும் தற்போது நிறைவடைந்து உள்ளது.

    அகழாய்வின் போது கிடைத்த தொல் பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாக, அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அவ்வாறு நடைபெற்று வரும் பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, தொல்லியியல் துறை ஆணையர் (முழு கூடுதல் பொறுப்பு) சிவானந்தம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், மதுரை கோட்ட பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் சத்தியமூர்த்தி, கீழடி கட்டிட மைய செயற்பொறியாளர் மணிகண்டன், கீழடி அகழாய்வு இணை இயக்குநர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×