search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குரங்குகள் அட்டகாசத்தை தடுக்க தென்னை மரங்களில் பாம்பு ஓவியம்
    X

    தென்னை மரங்களில் பாம்பு ஓவியம் வரையப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    குரங்குகள் அட்டகாசத்தை தடுக்க தென்னை மரங்களில் பாம்பு ஓவியம்

    • சிங்கம்புணரி அருகே குரங்குகள் அட்டகாசத்தை தடுக்க தென்னை மரங்களில் பாம்பு ஓவியத்தை விவசாயிகள் வரைந்தனர்.
    • இதனால் தென்னை விவசாயிகளுக்கு அதிக நஷ்டம் ஏற்படுகிறது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவில் சுமார் 1,600 ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் செய்யப்படுகிறது. தென்னை வளர்க்கும் விவசாயிகள் சிலர் பருவமழையை நம்பி மானாவாரியாகவும், மற்ற விவசாயிகள் கிணற்று பாசனத்திலும் தென்னை மரங்களை வளர்த்து வருகின்றனர்.

    இங்கு மலைபகுதிகளும், வனப்பகுதிகளும் அதிகம் உள்ளதால் குரங்குகள் ஏராளமாக இருக்கிறது. அவை உணவு தேடி கிராம பகுதிகளுக்குள் வந்து விடுகிறது. அங்குள்ள வயல் மற்றும் தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள பழங்கள், தேங்காய் உள்ளிட்டவைகளை சேதப்படுத்துகிறது.

    பிரான்மலை வனப்பகுதியில் ஏராளமான குரங்குகள் மற்றும் அணில்கள் இந்த தென்னை மரத்தை தேடி வந்து தென்னை மரத்தில் ஏறி அறுவடைக்கு தயாராக உள்ள இளநீர், தேங்காய்கள், குரும்பைகளை கடித்தும் பறித்தும் சேதப்படுத்துவதியும், அதில் உள்ள தண்ணீரை குடித்தும் விடுகிறது.

    இதனால் தென்னை விவசாயிகளுக்கு அதிக நஷ்டம் ஏற்படுகிறது. ரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதால், அவைகளிடம் இருந்து தேங்காய்களை பாதுகாப்பது தென்னை விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

    இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் முதலில் ஒரு சில மரங்களில் முள்வேலி அமைத்து பார்த்தனர். அதை குரங்குகள் லாவகமாக அகற்றிவிட்டு மேலே ஏறி சென்று தேங்காய்களை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் தற்போது வித்தியாசமாக புதிய முயற்சியில் இறங்கி உள்ளனர். பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப, பாம்பு நெளிவது போன்ற ஓவியத்தை தனித்தனியாக ஒவ்வொரு தென்னை மரத்திலும் பெயிண்டு மூலம் வரைந்துள்ளனர். இந்த ஓவியத்தை காணும் குரங்குகள் மற்றும் அணில்கள் தென்னை மரத்தில் நிஜபாம்புதான் இருக்கிறது என நினைத்து பயந்துபோய் மரத்தில் ஏறாமல் அங்கிருந்து சென்று விடுவதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி ஒடுவன்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி வீரனன் கூறியதாவது:-

    இந்த பகுதியில் குரங்குகள் அதிகமான அளவில் தொந்தரவு செய்து தேங்காய் விளைச்சலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குரங்குகள் தென்னை மரத்தின் மீது ஏறி குறும்பைகள், இளநீர் காய்கள் மற்றும் பூக்களை சேதப்படுத்துவதால் தென்னை மரத்தில் அதிக விளைச்சல் காண முடியவில்லை.

    குரங்குகளுக்கு பாம்பு என்றால் பயம் என்று பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டுள்ளேன். அதை மனதில் வைத்து எனக்கு சொந்தமான இடத்தில் உள்ள தென்னை மரங்களில் பாம்பு படம் வரைந்துள்ளேன். தென்னை மரங்களில் பாம்பு படம் வரைந்ததால் இந்த படத்தை பார்த்த குரங்குகள் நிஜ பாம்பு என்று பயந்து மரத்தில் ஏறுவதில்லை. இதனால் எனக்கு தென்னை விவசாயத்தில் சரியான மகசூல் கிடைத்து வருகிறது.

    இளநீர் மற்றும் தேங்காய்களை பறித்து குரங்குகள் அட்டகாசம் செய்தால் பாம்பு ஓவியத்தை தென்னை மரத்தில் விவசாயிகள் அனைவரும் வரைந்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×