என் மலர்
உள்ளூர் செய்திகள்
சமூக ஆர்வலர் கொலை: புதுக்கோட்டை கல் குவாரிகளில் அதிகாரிகள் சோதனை
- கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சுரங்கத் துறை அதிகாரிகள் முகாமிட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் கல் குவாரி முறைகேடுகளுக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர் ஜகபர் அலி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக திருமயம் பகுதியைச் சேர்ந்த கல் குவாரி அதிபர் ராசு, அவரது மகன் தினேஷ் லாரி உரிமையாளர் முருகானந்தம் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலைக்கு பின்னணியில் இருந்து செயல்பட்ட இன்னொரு கல்குவாரி உரிமையாளர் ராமையாவை போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே சமூக ஆர்வலர் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட ராசு மற்றும் ராமையா ஆகிய இருவரது கல் குவாரிகளிலும் இன்று புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் முகாமிட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த குவாரிகள் திருமயம் அருகே துளையானூரில் இருவரது குவாரிகளும் அடுத்தடுத்து உள்ளது. இந்த சோதனை இன்று காலை முதல் நடந்து வருகிறது. இதில் புதுக்கோட்டை புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் லலிதா, திருச்சி சுரங்கத்துறை உதவி இயக்குனர் சத்தியசீலன், கரூர் உதவி இயக்குனர் சங்கர் மற்றும் பெரம்பலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கனிமவளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதில் அரசு அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி கல் மற்றும் கனிம வளம் முறைகேடு நடந்துள்ளதா என ஆய்வு நடத்துகிறார்கள். இந்த சம்பவம் கல் குவாரி அதிபர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.