என் மலர்
உள்ளூர் செய்திகள்
தென்மேற்கு பருவமழை எதிரொலி- தருமபுரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் 91 சதவிகிதம் நீர் இருப்பு
- சின்னாறு அணை முழு கொள்ளளவான 50 அடியை எட்டியுள்ளது.
- தருமபுரி மாவட்ட விவசாயிகள் தற்போதுள்ள நீர் இருப்பை பயன்படுத்தி நல்ல விளைச்சலை காண பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் வழியாக தமிழ்நாட்டுக்கே வளம் கொழிக்க வைக்கும் 2 முக்கிய நதிகள் ஓடியும் குடிநீருக்கே பல நேரங்களில் தட்டுப்பாடு ஏற்பாடு நிலை உருவாகும். இதனால் பொதுமக்களும், விவசாய வேலைகள் முடங்கி விவசாயிகளும் வேதனையில் மூழ்குவதும் வாடிக்கை.
இந்நிலையில் சமீபத்தில் பெய்த தென்மேற்கு பருவமழை இந்த நிலையை மாற்றியுள்ளது. இந்த மழை எதிரொலியாக மாவட்டத்தில் உள்ள சின்னாறு, கேசர்க்குழி, நாகாவதி, தொப்பையாறு, தும்பலஹள்ளி, வாணியாறு, வரட்டாறு, ஈச்சம்பாடி உள்ளிட்ட 8 அணைகளிலும் சுமார் 91 சதவிகித நீர் நிரம்பியுள்ளது.
குறிப்பாக சின்னாறு அணை முழு கொள்ளளவான 50 அடியை எட்டியுள்ளது. இதேபோல நாகாவதி அணை முழு கொள்ளளவான 156 அடியையும், ஈச்சம்பாடி அணை முழு கொள்ளளவான 37 அடியையும் முழுமையாக எட்டியுள்ளது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தருமபுரி மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் வெள்ள அபாயம் குறித்து கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
ஏற்கனவே எல்லா அணைகளும் நீர் நிரம்பி உள்ள நிலையில் மேற்கொண்டு வெள்ளநீர் வரத்து அதிகரித்தால் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் நீரில் மிதக்கும் சூழல் ஏற்படும் என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகள், அவற்றுக்கு நீரை கொண்டு செல்லும் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புகளாலும் சரியாக தூர்வாரப்படாத நிலையில் உள்ளதாலும் உபரி நீரை சேமிக்க வழியற்ற நிலையில் இருப்பதாக அவர்கள் புகார் கூறுகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் அனைத்து வாய்க்கால்களையும், ஏரிகளையும் தூர்வாரி உபரிநீரை சேமிக்க ஏற்பாடு செய்தால் மட்டுமே வெள்ள பாதிப்புகளை தவிர்க்க முடியும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் இதற்கான அனைத்து முன்னேற்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு துரிதமாக செயல்பட்டு வருவதாகவும் இதனால் உபரி நீர் விளைநிலங்களிலும், குடியிருப்புகளிலும் புகாமல் தடுக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நடந்தால் வறட்சியை மட்டுமே சந்தித்து வரும் தருமபுரி மாவட்ட விவசாயிகள் தற்போதுள்ள நீர் இருப்பை பயன்படுத்தி நல்ல விளைச்சலை காண பிரகாசமான வாய்ப்பு உள்ளது.








