search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோசடி புகார்: பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் உட்பட 3 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை
    X

    மோசடி புகார்: பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் உட்பட 3 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை

    • பூட்டர் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களை இணைத்து பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கும் நோக்கில் செயல்பட்டதும் தெரியவந்தது.
    • வங்கி லாக்கரில் 93 பவுன் நகைகள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களும் இருந்ததாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருப்பவர் ஜெகநாதன் (66). இவர் வணிக நோக்கில் பூட்டர் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை தொடங்கி அந்த அலுவலகத்தையும் பல்கலைக்கழக வளாகத்திலேயே நடத்தி வந்தார்.

    இது தொடர்பாக பல்கலைக்கழக சட்ட ஆலோசகர் இளங்கோ என்பவர் கருப்பூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஜெகநாதன், பல்கலைக்கழக பதிவாளர் பொறுப்பு தங்கவேல், பேராசிரியர்கள் சதீஷ்குமார், ராம் கணேஷ் ஆகிய 4 பேர் மீதும் 8 பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர்.

    இதில் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டதால் தனியார் ஆஸ்பத்திரியில் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதற்கிடையே பூட்டர் நிறுவனம் செயல்பாடு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணையில் பூட்டர் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களை இணைத்து பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கும் நோக்கில் செயல்பட்டதும் தெரியவந்தது.

    இதை ஒட்டி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள இதழியல் துறை அலுவலகத்தில் உள்ள பூட்டர் நிறுவன அலுவலகத்தில் நேற்று 3 மணி நேரம் சோதனை நடத்தினர். மேலும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கனரா வங்கியில் பதிவாளர் தங்கவேல் வங்கி கணக்குகளை ஆய்வு செய்தனர்.

    குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சூர்யா தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட போலீசார் தங்கவேலுவின் மனைவி வெண்ணிலா முன்னிலையில் அவரது வங்கி கணக்கையும் ஆய்வு செய்தனர். அப்போது வங்கி லாக்கரில் 93 பவுன் நகைகள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

    மேலும் தலைமறைவாக உள்ள பதிவாளர் தங்கவேல், பேராசிரியர்கள் ராம் கணேஷ், சதீஷ்குமார் ஆகிய 3 பேரையும் பிடிக்க உதவி கமிஷனர் நிலவழகன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். அவர்கள் சென்னையில் கோர்ட்டில் ஆஜராக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதால் அவர்களை பிடிக்க சென்னையில் முகாமிட்டு தனிப்படை போலீசார் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் துணைவேந்தர் ஜெகநாதனின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்த நிலையில் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென கோரி அரசு தரப்பில் வாதாடப்பட்டு வருகிறது. ஆனாலும் இதுவரை ஐகோர்ட்டில் அது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இதனால் அவரது ஜாமீனை ரத்து செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    Next Story
    ×