search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் மோட்டர்சைக்கிள் திருடர்களை காட்டி கொடுக்கும் நவீன கேமராக்கள்
    X

    சென்னையில் மோட்டர்சைக்கிள் திருடர்களை காட்டி கொடுக்கும் நவீன கேமராக்கள்

    • மோட்டார் சைக்கிள் திருடர்கள் மாட்டிக் கொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
    • கேமராக்கள் சென்னை மாநகரில் 28 இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னையில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு என்பது தவிர்க்க முடியாத ஒரு குற்றமாகவே மாறிப் போயிருக்கிறது.

    விலை உயர்ந்த மோட் டார் சைக்கிள்களை கள்ளச் சாவி போட்டோ அல்லது மாற்று வழிகளிலோ திருடிக் கொண்டு செல்பவர்கள் சென்னை மாநகரில் சமீப காலமாகவே அதிகரித்து காணப்படுகிறார்கள்.

    இப்படி மோட்டார் சைக்கிள்களை திருடிச் செல்பவர்களை கண்டு பிடிப்பது என்பது போலீசாருக்கு பெரும் சவாலாகவே இருந்து வந்தது.

    இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் திருடர்களை பிடிப்பதற்கு சென்னை மாநகரில் நவீன கேமராக்கள் கைகொடுத்து வருகின்றன.. ஏ.என்.பி.ஆர். (ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரெகனேசன்) என்று அழைக்கப்படும் இந்த கேமராக்கள் சென்னை மாநகரில் 28 இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.

    இதுபோன்று நிறுவப்பட்டுள்ள 100 கேமராக்கள் மூலமாக திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வரு கிறது. இந்த கேமரா திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை எப்படி கண்டுபிடித்து கொடுக்கிறது?

    இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் எந்த பகுதியில் திருடப்பட்டுள்ளது. அது எந்த வகையான வாகனம் என்பது பற்றி வாகனங்களை பறிகொடுத்தவர்கள் போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்திருப்பார்கள்.

    அந்த தகவல்கள் அனைத்தையும் இதற்கென உரு வாக்கப்பட்டுள்ள செயலியில் பதிவேற்றம் செய்து வைத்துள்ளோம். இது போன்று 2021-ம் ஆண்டில் இருந்து 3,200 வாகனங்கள் செயலியில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    திருட்டு வாகனங்களை கண்டுபிடித்துக் கொடுக்கும் நவீன கேமராக்கள் அதனை புள்ளி விவரத்தோடு காவல் துறையின் வாட்ஸ் அப்புக்கு அனுப்பி வைத்து வருகிறது.

    பரங்கிமலை பகுதியில் காணாமல் போன ஒரு மோட்டார் சைக்கிள் பாரி முனை பகுதியில் ஓடுவதை அந்த கேமரா சமீபத்தில் காட்டிக்கொடுத்தது. உடனடியாக குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கு அது கைகொடுக்கும் வகையில் அமைந்திருந்தது.

    இது போன்று சென்னை மாநகரில் தினமும் மூன்று அல்லது நான்கு திருட்டு வாகனங்கள் பிடிபடுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்காக நடமாடும் கேமராக்களையும் காவல் துறையினர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த கேமராக்களும் திருட்டு மோட்டார் சைக்கிள்களை காட்டிக் கொடுத்து வருகின்றன.

    இத்தகைய 50 கேமராக்களும் பயன்பாட்டில் உள்ளன. இதன் மூலமாக திருட்டு மோட்டார் சைக்கிள்களை கண்டுபிடிப்பது தற்போது காவல்துறைக்கு மிகவும் எளிதான விஷயமாக மாறி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குற்றச் செயல்களுக்கு சென்னையில் ஓடும் லட்சக்கணக்கான மோட்டார் சைக்கிள்களில் வீடுகளுக்கு வெளியில் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களே பெரும்பாலும் திருடப்பட்டு வருகிறது. இப்படி திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை குற்றவாளிகள் செயின்பறிப்பு செல்போன் பறிப்பு போன்ற குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தி விட்டு ஏதாவது ஒரு பகுதியில் நிறுத்திவிட்டு செல்வார்கள்.

    பின்னர் மீண்டும் அந்த வாகனத்தை எடுத்து பயன்படுத்துவார்கள். தற்போது பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராக்கள் மூலமாக நிச்சயம் மோட்டார் சைக்கிள் திருடர்கள் மாட்டிக் கொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதன்மூலம் மோட்டார் சைக்கிள் திருடர்கள் இனி சென்னை போலீசாரிடம் இருந்து தப்ப முடியாத நிலை ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×