search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம் சந்தையில் நேந்திரன் வாழைத்தார் விலை திடீர் உயர்வு
    X

    மேட்டுப்பாளையம் சந்தையில் நேந்திரன் வாழைத்தார் விலை திடீர் உயர்வு

    • புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏலம் நடைபெற்று வருகிறது.
    • நேந்திரன் வாழைத்தார் கிலோ ஒன்றுக்கு அதிக பட்சமாக ரூ.40 வரை விற்பனையானது.

    மேட்டுப்பாளையம்

    மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் வாழைக்காய் ஏலம் மையம் செயல்பட்டு வருகிறது.இங்கு மேட்டுப்பாளையம், அன்னூர்,புளியம்பட்டி, சிறுமுகை,காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த வாழைத்தார்களை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதனை இந்த ஏல மையத்தில் ஏலம் விட்டு வியாபாரிகள் போட்டி போட்டு எடுத்துச்செல்வதும் வழக்கம்.

    இந்த மையத்தில் புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏலம் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் நேந்திரன், கதளி,பூவன், தேன் வாழை, ரஸ்தாளி, ரோபஸ்டா,செவ்வாழை உள்ளிட்ட பல்வேறு வகை வாழைத்தார்கள் விவசாயிகளால் இந்த மையத்திற்கு கொண்டு வரப்பட்டன. நேற்றைய ஏலத்தில் நேந்திரன் வாழைத்தார் கிலோ ஒன்றுக்கு அதிக பட்சமாக ரூ.40 வரையும், கதளி வாழைத்தார் கிலோ ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.25 வரையும் விற்பனையானது.

    மேலும்,பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500 வரையும்,தேன் வாழை தார் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.475 வரையும், ரஸ்தாளி தார் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.450 வரைக்கும், ரோபஸ்டா அதிகபட்சமாக தார் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.450 வரையும், செவ்வாழை அதிகபட்சமாக ரூ.800 வரையும் ஏலம் போனது. குறிப்பாக நேந்திரன் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிலோ ஒன்றிற்கு ரூ.20 வரை விற்பனையான நிலையில் தற்போது விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து ஏல மையத்தின் நிர்வாகிகள் சின்னராஜ் மற்றும் வெள்ளியங்கிரி கூறுகையில் மேட்டுப்பாளையம், அன்னூர், புளியம்பட்டி, சிறுமுகை, காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்பட்ட நேந்திரன் வாழைத்தார்கள் கடந்த பல நாட்களுக்கு முன்னர் சூறாவளி காற்றின் காரணமாக வரத்து அதிகமாக இருந்தன. இதனால் கடும் விலை வீழ்ச்சி அடைந்து அதிகபட்சமாக ரூ.20 வரை மட்டுமே ஏலம் போனது.

    தற்போது நேந்திரன் வாழைத்தார்களின் வரத்து குறைவாக இருப்பதாலும்,கேரள வியாபாரிகளின் வரத்து அதிகரித்துள்ளதாலும் அதிகபட்சமாக நேந்திரன் வாழைத்தார் கிலோ ஒன்றிற்கு ரூ.40 வரை ஏலம் போனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்றனர்.

    Next Story
    ×