search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கணக்கெடுப்பு பணி தொடங்கியது: பாரிமுனையில் ரோட்டோரம் வசிப்பவர்களை இடமாற்றம் செய்ய முடிவு
    X

    கணக்கெடுப்பு பணி தொடங்கியது: பாரிமுனையில் ரோட்டோரம் வசிப்பவர்களை இடமாற்றம் செய்ய முடிவு

    • சென்னை மாநகராட்சி கணக்கெடுப்பை தொடங்கியது.
    • வேறு இடத்தில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை

    சென்னை நகரின் வரலாற்றில் ஜார்ஜ்டவுன் பகுதி முக்கியமானது. பழமையான பாரம்பரியமிக்க கட்டிடங்கள் எழில் மாறாமல் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த பகுதியில் சாலை யோரம் குடிசை அமைத்து சில குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    ஜார்ஜ் டவுனில் உள்ள ஜாபர் சாரங், நாராயணப்பா தெருக்களில் 3 தலை முறையாக இவர்கள் வசித்து வருகிறார்கள்.

    100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடற்ற நிலையில் வசித்து வருவதை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து சென்னை மாநகராட்சி கணக்கெடுப்பை தொடங்கியது. அவர்கள் விரைவில் வெளியேற்றப்பட்டு வேறு இடத்தில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த தெருக்களில் ஒன்றில் உள்ள சுங்க அலுவலகம் இப்பகுதியில் கட்டுமானத்தை தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும் இந்த குடும்பங்களுக்கு மாற்று குடியிருப்புகளை வழங்குமாறும் மாநகராட்சியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ஜார்ஜ் டவுன் பகுதியில் வசிக்கும் இவர்களுக்கு எர்ணாவூரில் வீடுகள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அதனை இவர்கள் ஏற்கவில்லை.

    இதுகுறித்து 3 தலை முறையாக வசித்து வரும் ஒரு குடும்பத்தினர் கூறும்போது, எர்ணாவூரில் உள்ள குடியிருப்புகளுக்கு மாற விருப்பம் இல்லை. நாங்கள் மிண்ட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கவே விரும்புகிறோம். எங்கள் குடும்பங்கள் இங்கு ஆண்டாண்டு காலமாக வசித்து வருகின்றன. எங்கள் பெற்றோரும் இங்கு பிறந்து வளர்ந்தவர்கள். இங்குதான் எங்கள் வாழ்வாதாரமும் உள்ளது' என்று கூறினார்கள்.

    சில இளம் பெண்களை கொண்ட குடும்பங்கள் தெருக்களில் வாழ்வது பாதுகாப்பாற்றது என்று உணர்ந்து தங்கள் உடமைகளில் சிலவற்றை அங்கே விட்டுவிட்டு அருகில் உள்ள சிறிய இடத்தை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

    இந்த பகுதி வார்டு கவுன்சிலர் ஆசாத் கூறும் போது, `வீடுகள் வழங்கப்பட்டதில் திருப்தி அடையும் வரை குடும்பங்கள் இடம் மாறுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. கணக்கெடுப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. எல்லோரும் ஒத்துழைப்பு கொடுத்தனர்' என்றார்.

    Next Story
    ×