என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 1,238 பேர் வங்கி கணக்கு முடக்கம்- போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தகவல்
    X

    கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 1,238 பேர் வங்கி கணக்கு முடக்கம்- போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தகவல்

    • மதுபானத்தை விட கஞ்சா அதிக போதை தரக்கூடியது. இதன் காரணமாக சமூகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சமூக விரோத குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
    • மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டு கஞ்சா விற்ற 130 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களின் 226 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.

    மதுரை:

    மதுரை மண்டலத்தில் நெல்லை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி உள்பட 10 மாவட்டங்கள் உள்ளன. இங்கு கஞ்சா விற்பனை கொடி கட்டி பறந்து வந்தது. இந்த நிலையில் மதுரை மண்டல ஐ.ஜியாக அஸ்ரா கார்க் பொறுப்பேற்றார். அவரது உத்தரவின் பேரில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தது. இதனால் தென் மண்டலங்களில் இன்றைக்கு கஞ்சா விற்பனை, பதுக்குதல் மற்றும் கடத்தல் ஆகியவை ஓரளவு குறைந்து உள்ளன.

    இது தொடர்பாக மதுரை மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் கூறியதாவது:-

    மதுபானத்தை விட கஞ்சா அதிக போதை தரக்கூடியது. இதன் காரணமாக சமூகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சமூக விரோத குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

    எனவே மேற்கண்ட குற்றங்களுக்கு மூல காரணியாக விளங்கும் கஞ்சாவை ஒழிப்பது என்று முடிவெடுத்து செயல்பட்டு வருகிறோம். இதற்காக 10 மாவட்டங்களிலும் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் போலீசாருடன் ஒருங்கிணைந்து கஞ்சா வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டு கஞ்சா விற்ற 130 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களின் 226 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. இதேபோல விருதுநகரில் 103 வழக்குகளில் 200 வங்கிக் கணக்குகளும், திண்டுக்கல்லில் 77 வழக்குகளில் 116 வங்கிக் கணக்குகளும், தேனி மாவட்டத்தில் 142 வழக்குகளில் 225 வங்கிக் கணக்குகளும், ராமநாதபுரத்தில் 32 வழக்குகளில் 72 வங்கிக் கணக்குகளும், சிவகங்கையில் 17 வழக்குகளில் 30 வங்கிக் கணக்குகளும், நெல்லை மாவட்டத்தில் 20 வழக்குகளில் 36 வங்கி கணக்குகளும், தென்காசியில் 34 வழக்குகளில் 31 வங்கிக் கணக்குகளும், தூத்துக்குடியில் 124 வழக்குகளில் 182 வங்கி கணக்குகளும், கன்னியாகுமரியில் 75 வழக்குகளில் 120 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 1,238 பேர் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

    தென் மண்டலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் அசையும், அசையா சொத்துக்கள் முடக்கம் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் இது தொடர்பாக மதுரை போலீஸ் சூப்பிரண்டு சிவ பிரசாத் கூறுகையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக நடப்பாண்டில் மட்டும் 14 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது தவிர 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 163 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.70 லட்சத்து 33 ஆயிரம் மதிப்புள்ள 703 கிலோ கஞ்சா, 3 வீடுகள், 13 செல்போன்கள், 30 இருசக்கர வாகனங்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள், 4 ஆட்டோக்கள் மற்றும் ஒரு கனரக வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும், குற்றவாளிகளின் நெருங்கிய உறவினர்களில் சந்தேகத்திற்கு உரிய நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.

    மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பிரகாஷ் என்பவர் சரக்கு லாரியில் 1000 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்டார். திருவேடகம் கல்லூரி அருகில் உள்ள தோட்டத்தில் 2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து இருந்த பாண்டி என்பவரை சோழவந்தான் போலீசார் கைது செய்து உள்ளனர்.

    திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பாலதண்டாயுதபாணி கோவில் அருகே சரக்கு லாரியை சோதனை செய்த போது, திண்டுக்கல் ஆத்தூரைச் சேர்ந்த முத்துப்பாண்டி, ரோசன் ஆகிய 2 பேரும் 6.10 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்டனர்.

    மதுரை மாவட்டத்தில் போலீசாரின் கஞ்சா வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×