search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயற்சி- போலீசார் தடுத்து நிறுத்தினர்
    X
    தீக்குளிக்க முயன்றவர்களை தடுத்து அவர்கள் மீது போலீசார் தண்ணீர் ஊற்றிய காட்சி.

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயற்சி- போலீசார் தடுத்து நிறுத்தினர்

    • தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் உள்ளோம்.
    • ரெயில்வே துறையில் எனது மனைவிக்கு சேரவேண்டிய பணத்தையும் பெற முடியாமல் உள்ளது.

    நெல்லை:

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை மனுவினை கொடுத்தனர்.

    அம்பை அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம் சேரி மெயின்ரோட்டை சேர்ந்தவர் மரியசிங்கம் (வயது 73). இவர் இன்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தார்.

    அப்போது அவர் கலெக்டர் அலுவலக வாசலில் கையில் வைத்திருந்த மண்எண்ணையை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த, பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர் மீது தண்ணீர் ஊற்றி அவரை அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-

    எனது மனைவி சந்திப்பு ரெயில் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்தார். ஆனால் அவர் உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். எனது மகனும் 14 ஆண்டுகளுக்கு முன்பு மாயமாகி விட்டார்.

    எனது மகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எங்களது ரேஷன் கார்டு தொலைந்து விட்டது.

    இதனால் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் உள்ளோம். மேலும் ரெயில்வே துறையில் எனது மனைவிக்கு சேரவேண்டிய பணத்தையும் பெற முடியாமல் உள்ளது. வயதான காலத்தில் என்னால் எனது மகளுக்கு சிகிச்சை அளிக்க அழைத்து செல்ல முடியவில்லை. எனவே எங்களுக்கு மீண்டும் ரேஷன்கார்டு வழங்க வேண்டும் என கூறினார். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே மரிய சிங்கம் தீக்குளிப்பதை தடுத்து நிறுத்திய சிறிது நேரத்திற்குள் கலெக்டர் அலுவலகத்தில் மற்றொருவர் தனது தலையில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    உடனடியாக போலீசார் அவரை பத்திரமாக அழைத்து சென்று அவரிடமும் விசாரணை நடத்தினர். அதில், அவர் அம்பாசமுத்திரம், பொத்தை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த மாரியப்பன் என்பது தெரியவந்தது. மேலும் அவர் கூறும்போது, எங்களுக்கு சொந்தமான காலி மனை சுப்பிரமணியபுரம் பொத்தையில் உள்ளது. ஆனால் அந்த இடத்தை சிலர் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதனை அவர்களிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும் என்றார்.

    Next Story
    ×