search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மாணவர்களுக்கு போதை ஊசி சப்ளை செய்த 3 பேர் கைது
    X

    மாணவர்களுக்கு போதை ஊசி சப்ளை செய்த 3 பேர் கைது

    • ஊசி மருந்து பாட்டில் ரூ.7 க்கு வாங்கி அதை ரூ. 300 வரை விற்பனை செய்துள்ளனர்.
    • போதை பழக்கத்திற்கு அடிமையான மாணவர்கள் உடல் மெலிந்து சோர்வாக காணப்படுவார்கள்.

    திருச்சி:

    திருச்சி மாநகரில் இளைஞர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களை சீரழிக்கும் போதை ஊசி பழக்கம் அதிகரித்து வருவதாக புகார் எழுந்தது. அவ்வப்போது போலீசார் போதை ஊசி விற்பனை கும்பலை கைது செய்து வந்தனர்.

    அதைத் தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் காமினி போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் போதை பொருட்கள், மாத்திரைகள், ஊசிகளை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரபடுத்தப்பட்டது. இதில் உறையூர் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கும்பல் போதை ஊசி சப்ளை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராமராஜ் தலைமையிலான போலீசார் திருச்சி வடவூர் பகுதியில் ஊசியுடன் போதை மருந்து மாணவர்களுக்கு சப்ளை செய்த அதே பகுதியைச் சேர்ந்த பிரசாத் (வயது 32) இஃப்ரான்( 23) சாலை ரோடு ரியாஸ்கான்(23) ஆகியோரை கைது செய்தனர்.

    பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 3 பேரும் ஆன்லைனில் போதை மாத்திரைகள் ஆர்டர் செய்து வாங்கி சப்ளை செய்தது தெரியவந்தது. மேலும் டாக்டர்கள் சிலரின் மருந்து சீட்டுகளை போலியாக அச்சடித்து அதில் டாக்டர்கள் பரிந்துரைப்பது போன்று கையெழுத்திட்டு போதை மாத்திரை மற்றும் ஊசிகளை ஆர்டர் செய்து தபால் மூலமும் வாங்கிய தகவலும் கிடைத்தது.

    ஊசி மருந்து பாட்டில் ரூ.7 க்கு வாங்கி அதை ரூ. 300 வரை விற்பனை செய்துள்ளனர். இது தொடர்பாக தனிப்படை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, மாணவர்களுக்கு போதை ஊசி மற்றும் மருந்து சப்ளை செய்த பழைய குற்றவாளிகள் 20 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    போதை பழக்கத்திற்கு அடிமையான மாணவர்கள் உடல் மெலிந்து சோர்வாக காணப்படுவார்கள். அவர்களின் கைகளில் ஆங்காங்கே தழும்புகள் இருக்கும். எனவே தங்கள் குழந்தைகளின் கைகளில் சந்தேகத்திற்குரிய வகையில் தழும்புகள் உள்ளதா? என்பதை பெற்றோர் அடிக்கடி கண்காணித்து அவர்களை பாதுகாக்க வேண்டும்.

    போதை ஊசி செலுத்தும் போது அது நேராக நரம்பு மண்டலத்தை பாதிக்கும். உணவு உட்கொள்வதில் ஆர்வம் குறையும். தொடர்ந்து 3 ஆண்டுகள் இதே பழக்கத்தில் இருந்தால் மூளை நரம்பு மண்டலம் முற்றிலுமாக செயல் இழந்து உயிருக்கு ஆபத்தாக முடியும் என்றார்.

    Next Story
    ×