search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர்கள் 3 பேர் பிணமாக மீட்பு
    X

    பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர்கள் 3 பேர் பிணமாக மீட்பு

    • ஆற்றின் கரைப்பகுதியில் 3 பேரின் உடைகள் மற்றும் செல்போன், அவர்கள் அணிந்திருந்த செருப்புகள் மட்டும் இருந்தது.
    • ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பிலிக்கல்பாளையம் நகப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ராஜ். இவரது மகன் வினித் (20). இவர் குமாரபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவரது நண்பர்களான தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மகன் நந்தகுமார்(21) மற்றும் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த ஷேக் பெசருல்லி சாகிப் ஆகிய இருவரும் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தனர்.

    நேற்று வினித் வீட்டிற்கு அவரது நண்பர்களான நந்தகுமார், ஷேக் பெருசல்லி சாகிப் ஆகியோர் வந்துள்ளனர். பின்னர் மாலை சுமார் 3 மணியளவில் நகப்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றிற்கு நண்பர்கள் 3 பேரும் குளிக்க சென்றுள்ளனர். இரவு 7 மணி ஆகியும் வீட்டிற்கு வராததால் வினித்தின் பெற்றோர் காவிரி ஆற்று பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது ஆற்றின் கரைப்பகுதியில் 3 பேரின் உடைகள் மற்றும் செல்போன், அவர்கள் அணிந்திருந்த செருப்புகள் மட்டும் இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் ஜேடர்பாளையம் போலீசார் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ராஜவேல், ஜெர்மையா அருள் பிரகாஷ், செல்வம், கார்த்திகேயன், பூபதி, சரவணகுமார், சரவண கணேஷ் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் காணாமல் போன 3 கல்லூரி மாணவர்களையும் காவிரி ஆற்றில் மீன்பிடி படகுமூலம் தேடினர்.

    இரவு 11 மணி வரை தேடி பார்த்தனர். இரவு இருள் சூழ்ந்ததன் காரணமாக தண்ணீரில் மாயமான மாணவர்களை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து 11 மணியுடன் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை 2-வது நாளாக நாமக்கல் தீயணைப்பு வீரர்கள் நகப்பாளையம் காவிரி ஆற்றுக்கு வந்து மீன்பிடி படகு மூலம் காவிரி ஆற்று தண்ணீரில் மூழ்கி காணாமல் போன 3 பொறியியல் கல்லூரி மாணவர்களை தொடர்ந்து தேடினர்.

    அப்போது வட்டப்பாறை என்ற பகுதியில் பாறை இடுக்கில் இருந்து மாணவர் வினித் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவரது உடலை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். தொடர்ந்து மேலும் நந்தகுமார், ஷேக் பெசருல்லி சாகிப் ஆகிய 2 கல்லூரி மாணவர்களின் உடல்களையும் மீட்டனர். அவர்களின் உடல்களை பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×