என் மலர்
உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளியில் பள்ளம் தோண்டும்போது பழங்காலத்து 5 குடுவைகள் கண்டெடுப்பு
- குடுவையை கைப்பற்றி போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்துள்ளனர்.
- 2 அடி உயர முள்ள முழுமையான குடுவை ஒன்றும், உடைபட்ட சிறிய ரக 4 குடுவைகளும் இருந்தது.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமையப்பெற்றுள்ளது.
இப்பள்ளிக்கு சுற்று சுவர் உள்ள நிலையில், அதற்கு கேட் அமைப்பதற்காக கடந்த 28-ந்தேதி அன்று பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜசேகரன், ஜே.சி.பி. வாகனத்தை அழைத்து பள்ளம் எடுத்துள்ளார். அப்போது சுமார் 5 அடி வரை பள்ளம் எடுத்தபோது, முக்கோண வடிவில் கல் ஒன்று இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். உடனே ஜே.சி.பி. எந்திரத்தை நிறுத்தச்சொல்லியதோடு, அந்த வாகனத்தை உடனே அனுப்பியுள்ளனர். பின்னர் கட்டிட மேஸ்திரி சிலம்பு மற்றும் குமார் உதவியுடன் கடப்பாரை கொண்டு முக்கோண வடிவ கல்லை அகற்றியுள்ளனர். அப்போது அந்த கல்லுக்கடியில் சுமார் 2 அடி உயர முள்ள முழுமையான குடுவை ஒன்றும், உடைபட்ட சிறிய ரக 4 குடுவைகளும் இருந்தது. பின்னர் தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் சத்திய மூர்த்தி ஆகிய இருவரும் குடுவையை எடுத்து பள்ளிக்கு சென்று வைத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த கட்டிட மேஸ்திரி சிலம்பு தாமோதரஹள்ளி கிராம நிர்வாக அலுவலர் கவுரிசங்கரை சந்தித்தபோது, நடந்த இந்த விபரத்தினை தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த கிராம நிர்வாக அலுவலர் உடனடியாக பள்ளிக்கு சென்று குடுவை பற்றிய விபரத்தை கேட்டுள்ளார். அவர்களும் அதை ஒப்புக்கொண்டுள்ளனர். குடுவையில் உள்ளவற்றை அகற்றிவிட்டு தண்ணீர் விட்டு சுத்தமாக கழுவி வைத்திருந்த குடுவையை கிராம நிர்வாக அலுவலரிடம் காண்பித்தனர். கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போச்சம் பள்ளி வட்டாட்சியர் மகேந்திரன், தலைமை ஆசிரியரிடம் விசாரித்த போது, உள்ளே ஒன்றும் இல்லை எனவும் சுத்தமாக வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். குடுவை கிடைத்தவுடன் ஏன் தெரிவிக்கவில்லை என கேட்டதற்கு, பதில் ஏதும் அளிக்காமல் இருந்ததாக வட்டாட்சியர் தெரிவித்தார்.
தற்போது குடுவையை கைப்பற்றி போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்துள்ளனர்.
தொல்லியல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளதாகவும், அவர்கள் வந்தவுடன் ஒப்படைத்து விடுவதாக வட்டாட்சியர் மகேந்திரன் தெரிவித்தார்.
மேலும் பழங்காலத்து குடுவை கிடைத்தவுடன் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்காமல் வைத்திருந்ததால் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் மீது நாகரசம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிப்பதாக வட்டாட்சியர் தெரிவித்தார்.