search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மெட்ரோ ரெயில்-  அடையாறு ஆற்றின் அடியில் சுரங்கம் தோண்டும் பணி 50 சதவீதம் நிறைவு
    X

    மெட்ரோ ரெயில்- அடையாறு ஆற்றின் அடியில் சுரங்கம் தோண்டும் பணி 50 சதவீதம் நிறைவு

    • 23 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.
    • அடையாறு ஆற்றின் கீழே சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2 மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் 2-ல் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதி மாதவரம் மில்க் காலனியில் இருந்து சிறுசேரி சிப்காட் வரை 45.4 கி.மீ. தூரம் வரை அமைக்கப்படுகிறது.

    மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் சுரங்கப்பாதையாக பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. மொத்தம் உள்ள 116 கி.மீ. தூரத்திற்கு இரண்டாம் திட்டப் பணிகளில் 42 கி.மீ. கட்டுமானத்திற்கு 23 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் 19 எந்திரங்கள் பல்வேறு இடங்களில் இயங்கி வருகின்றன.

    தி.நகர் மற்றும் கோடம்பாக்கம் போன்ற இடங்களில் களிமண் நிலம் இருந்தாலும் அடையாறு மற்றும் திருவான்மியூர் ஆகிய இடங்களில் பாறைகள் நிறைந்த பகுதியாகும்.

    இந்த திட்டப் பணியில் சில சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பாறை மண்ணின் வழியாக சுரங்கப் பாதைகளை அமைக்க இணைக்கப்பட்டு உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் அடையாறு ஆற்றின் கீழே சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2 மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்டது.

    தற்போது ஆற்றின் பாதி வரையில் சுரங்கம் தோண்டும் பணி முடிந்துள்ளது. மற்றொரு எந்திரம் சேத்துப்பட்டு ஏரிக்கு கீழே பல மீட்டர் தூரத்திற்கு சுரங்கம் தோண்டும் பணியை மேற்கொள்ளும். கிரீன்வேஸ் ரோடு ஸ்டேஷன் முதல் அடையாறு சந்திப்பு நிலையம் வரையிலான 1.6 கி.மீ. தூரத்திற்கு அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் எந்திரம் இன்னும் 3 மாதங்களில் ஆற்றின் தெற்கு கரையை வந்தடையும் என்று மெட்ரோ ரெயில் திட்ட இயக்குனர் அர்ச்சுனன் தெரிவித்தார்.

    மேலும் ஒரு சுரங்கம் தோண்டும் எந்திரம் மெதுவாக ஸ்டெர்லிங் சாலையை நோக்கி முன்னேறி வருகிறது. ஸ்டெர்லிங் சாலையை அடைய 3 மாதங்கள் ஆகலாம். மற்றொரு எந்திரம் சேத்துபட்டு ஏரி வழியாக கீழ்ப்பாக்கம் நோக்கி சென்று ஒரு மாதத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    Next Story
    ×