search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலப்பாளையம் கால்நடை சந்தையில் விற்பனைக்கு குவிந்த 6 ஆயிரம் ஆடுகள்
    X
    பொங்கல் பண்டிகையையொட்டி மேலப்பாளையம் கால்நடை சந்தையில் இன்று வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது. ஆடுகளுடன் திரண்டிருந்த வியாபாரிகள்.

    மேலப்பாளையம் கால்நடை சந்தையில் விற்பனைக்கு குவிந்த 6 ஆயிரம் ஆடுகள்

    • தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • மறுநாள் கரிநாளாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் அசைவ பிரியர்கள் இறைச்சி சாப்பிடுவார்கள்.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் மிகப்பெரிய கால்நடை சந்தையாக விளங்கும் எட்டயபுரம் ஆட்டுச்சந்தைக்கு அடுத்தப்படியாக மேலப்பாளையம் கால்நடை சந்தை புகழ்பெற்றவையாகும்.

    மேலப்பாளையத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் சந்தையில் தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வருவது வழக்கம்.

    அந்த நாளில் சந்தைக்கு ஆயிரக்கணக்கில் ஆடுகள் கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படும். மாடுகள், கோழிகள், மீன், கருவாடு உள்ளிட்ட பொருட்கள் விற்பனையும் தனித்தனி இடங்களில் நடைபெறும்.

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு மறுநாள் கரிநாளாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் அசைவ பிரியர்கள் இறைச்சி சாப்பிடுவார்கள். இதையொட்டி இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தையில் வியாபாரிகள், இறைச்சி கடைக்காரர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, தேனி உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆடு, மாடுகளோடு சந்தையில் குவிந்தனர். சந்தையை ஒட்டியுள்ள நேதாஜி சாலை, மேலப்பாளையம் சக்திநகர் பகுதியிலும் வியாபாரிகள் கோழிகள் மற்றும் மீன்களுடன் விற்பனைக்காக குவிந்தனர்.

    சந்தையில் தரமான கிடாக்கள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. நடுத்தர ஆடுகள் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. குட்டியுடன் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட ஆடுகள் ரூ.10 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

    கன்னிகிடா, வெள்ளாடு, செம்மறியாடு, கிடா ரகங்கள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன. அதாவது கொடி ஆடு, நாட்டு ஆடு போன்ற நாட்டினங்கள், செவ்வாடு, மயிலம்பாடி உள்ளிட்ட செம்மறி ஆட்டினங்கள் ஆயிரக்கணக்கில் விற்பனைக்கு குவிந்தன. சுமார் 6 ஆயிரம் ஆடுகள் வரை இன்று விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

    சந்தைக்கு வரத்து அதிகரிப்பால் ஆடுகளின் விலை கணிசமாக குறைந்தது. இதனால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். அதே நேரத்தில் விலை ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்ததால் ஆடு வாங்க வந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×