search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசித்துவிட்டு எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை அறிவித்தாரா?- அண்ணாமலை பதில்
    X

    கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசித்துவிட்டு எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை அறிவித்தாரா?- அண்ணாமலை பதில்

    • இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு, யாருக்கு என்ன பலம் என்பதை காண்பிப்பது மட்டும் முக்கியமல்ல.
    • 2 மாதத்தில் இந்த இடைத்தேர்தலை மக்கள் மறந்துவிடுவார்கள்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட் எப்படி வரும் என்று நேற்றைய தினம் வெளியான பொருளாதார சர்வே ஆவணம் ஒரு அளவீடாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

    பட்ஜெட்டை பொறுத்தவரை அமிர்த கால பட்ஜெட் என நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார். அடுத்த 25 ஆண்டுகளுக்கான அச்சாணியாக இந்த பட்ஜெட் இருக்கும்.

    இந்தியாவின் உட்கட்டமைப்புக்கு ரூ.10 லட்சம் கோடி வரை நிதி ஒதுக்கி உள்ளார்கள். இதில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்குவார்கள் என்பது எதிர்ப்பார்ப்பு மட்டுமல்ல, எங்கள் நம்பிக்கை.

    ஐ.எம்.எப். கணிப்பின்படி இந்த ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி இந்த ஆண்டுக்கான அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்து செல்லும். நகர்ப்புற வேலைவாய்ப்பை பொறுத்தமட்டில் கோவிட் காலத்தின் பாதிப்பை இந்தியா தாண்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    முக்கியமாக ஆளுங்கட்சியின் பண பலம், அரசியல் பலம், அரசு எந்திரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு எதிராக ஒரு பலம் வாய்ந்த வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு. இந்த விவகாரத்தை பொறுத்தவரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள், தெளிவுபடுத்துகிறோம்.

    மெரினாவில் கலைஞர் பேனா சிலை வைப்பதால் 13 மீன்பிடி கிராமங்களுக்கு பிரச்சனை இருக்கிறது. அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். தமிழக அரசு நடத்தியது கருத்து கேட்பு கூட்டமா அல்லது மாவட்ட செயலாளர்களில் யார் அதிகம் சத்தம் எழுப்புகிறார்கள் என்பதை காட்டுவதற்காக நடத்தப்பட்ட கூட்டமா என்று தெரியவில்லை.

    இந்த கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், என்.ஜி.ஓ.க்களும் சிலை வைக்க வேண்டாம் என்றே கூறியிருக்கிறார்கள். அவர்களுடைய அறிவாலய பணத்தில் எந்த இடத்திலும் பேனா சிலையை வைக்க ஜனநாயகத்தில் இடம் உள்ளது. ஆனால் பொது இடம் என்று வரும்போது மக்களின் கருத்தை மதிக்க வேண்டும்.

    2022 ஆகஸ்டு மாதம் இந்தியா டுடே நடத்திய ஸ்டேட் ஆப் தி நேஷன் நடத்திய கருத்து கணிப்பில் மு.க.ஸ்டாலினுக்கு 60 சதவீத மக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதே பத்திரிகை ஜனவரி 26 அன்று நடத்திய கருத்து கணிப்பில் மு.க.ஸ்டாலினின் இமேஜ் 44 சதவீதம் சரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 6 மாதங்களில் 16 சதவீதம் எந்த முதல்வரும் சரிவை சந்திக்கவில்லை.

    அவர்களின் செயல்பாட்டை வைத்து பார்க்கும் போது, வருகிற 2024-ல் கணக்கெடுத்தால் நிச்சயமாக செல்வாக்கு 20 சதவீதத்திற்கும் கீழ் வந்துவிடும். தி.மு.க. தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அவர்கள் என்ன செய்தாலும் ஈரோடு இடைத்தேர்தல் முடிவு மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்த போகிறது.

    பேனா சிலை விவகாரத்தில் தமிழக மீனவர்களோடு, என்.ஜி.ஓ.க்களோடு கைக்கோர்க்க தயாராக இருக்கிறோம். மீனவர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எடப்பாடி பழனிசாமி ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை இன்று அறிவித்துள்ளார். அவர் பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணியில் உள்ள தலைவர்களிடம் கலந்தாலோசித்து விட்டுத்தான் அறிவித்தாரா என்ற நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, ஈரோடு இடைத்தேர்தல் குறித்து யாரிடம் என்ன பேசினோம் என்பதை வெளியில் கூறுவது நாகரிகமாக இருக்காது. எல்லா தலைவர்களிடமும் பேசியிருக்கிறோம். கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.

    இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு, யாருக்கு என்ன பலம் என்பதை காண்பிப்பது மட்டும் முக்கியமல்ல. 2 மாதத்தில் இந்த இடைத்தேர்தலை மக்கள் மறந்துவிடுவார்கள். ஆனால் நாம் 2024 பாராளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.

    Next Story
    ×